நிறுவனங்களுக்கான காப்புறுதித் திட்டத்தை ஏஐஏ சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனம் 2025ஆம் ஆண்டு முதல் விரிவுபடுத்துகிறது.
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் ஊழியர்களின் மருத்துவக் கட்டணத்தை முழுமையாக (அதிகபட்ச வரம்பு வரை அல்லது கட்டணத் தொகைக்கு ஏற்ப) செலுத்தும் புதிய அம்சம் ஒன்றை ஏஐஏ சிங்கப்பூர் அறிமுகப்படுத்துகிறது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது போல நோயாளிகளின் வீட்டில் வழங்கப்படும் சிகிச்சைக்கும் 7 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவப் பரிந்துரைக் கடிதம் இல்லாது நேரடியாக வழங்கப்படும் சிறார் மருத்துவச் சேவைக்கும் காப்புறுதித் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள விபத்து, அவசரகாலப் பிரிவுகளில் வெளிநோயாளி சிகிச்சை பெறுபவர்களுக்கும் காப்புறுதித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
ஏஐஏ சிங்கப்பூர் காப்புறுதித் திட்டத்தின் விரிவாக்கம் காரணமாக 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட அனுகூலங்களைப் பெற அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“சிங்கப்பூரில் முழுநேர ஊழியர்கள் வாரத்துக்குச் சராசரியாக 40 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பணிபுரிகின்றனர். ஊழியர்களின் மனநலத்துக்கு முதலாளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்,” என்று ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தின் திரு கென்னத் டான் தெரிவித்தார்.
தனிநபர் சுகாதாரத் திட்டங்களைச் சேர்க்காமல் சிங்கப்பூரின் குழு காப்புறுதிச் சந்தைக்கான மொத்த சந்தா தொகை 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏறத்தாழ $2 பில்லியனாகப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
மே மாத இறுதிக்கும் ஜூன் மாத தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஏஐஏ நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில் 500 பேர் பங்கெடுத்தனர்.
மனநலம் தொடர்பான சிகிச்சைகளுக்குக் கூடுதல் ஆதரவு தேவை என்று ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 59 விழுக்காட்டினர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

