ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, பல நிறுவனங்களின் இயக்குநரான ஒரு பெண், தமது நிறுவனங்களுக்காக வரியைத் திரும்பப் பெற $1.4 மில்லியனுக்கும் அதிக மதிப்பிலான போலியான கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தார்.
முறைகேடாகப் பெறப்பட்ட அந்த நிதியின் ஒரு பகுதியைத் தம் காதலனுக்கு அவர் மாற்றினார். மலேசியாவில் உள்ள ஒரு வீட்டுக் கடன் தவணை, கடன்பற்று அட்டைக் கட்டணங்கள், காப்புறுதிச் சந்தாவைச் செலுத்த இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது.
பொருள், சேவை வரியைத் (ஜிஎஸ்டி) தாக்கல் செய்வதில் தவறான பதிவுகளைச் செய்தது, பணமோசடி, தங்கள் கடமையைச் செய்வதிலிருந்து சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணைய அதிகாரிகளுக்கு இடைஞ்சல் விளைவித்தது ஆகிய குற்றங்களை டான் கியான் பெங், 38, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) ஒப்புக்கொண்டார்.
அவருக்கு 10 மாத, 74 வாரச் சிறைத்தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன், $1.9 மில்லியனுக்கும் அதிகமான தொகையைச் செலுத்துமாறும் நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.
2017 ஆகஸ்ட்முதல் 2024 அக்டோபர்வரை, பல்வேறு காலகட்டங்களில் தமக்காகவும் தமது நிறுவனங்களுக்காகவும் 87 ஜிஎஸ்டி வரிகளை டான் தாக்கல் செய்திருந்தார்.

