மின்சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களுக்காக 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

1 mins read
8e562d3a-e5c0-45ad-a340-5d01c9dc8821
ஜூலை 14ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மின்சிகரெட்டுகளையும் அவரின் அடையாள அட்டையையும் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரி காண்பிக்கின்றார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்படுவதாகச் சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) தெரிவித்திருக்கின்றன.

மின்சிகரெட்டுகளை விற்றது, விளம்பரப்படுத்தியது, இறக்குமதி செய்தது முதலியவற்றுக்காக 18 பேர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர் என்று அமைச்சும் ஆணையமும் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது. அவர்கள் மீது புகையிலை (விளம்பர, விற்பனைக் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படும்.

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளை வைத்திருந்தது, விற்றது அல்லது இறக்குமதி செய்தது முதலிய குற்றங்களுக்காக ஆகஸ்ட் 14 நிலவரப்படி, ஐந்து பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அத்தகைய 65 சம்பவங்களை ஆணையம் விசாரித்து வருகிறது.

எட்டோமிடேட் கலக்காத மின்சிகரெட்டுகளின் தொடர்பிலான குற்றங்களுக்காக இன்னும் 100 பேர் விசாரிக்கப்படுகின்றனர்.

“சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் முடுக்கிவிட்டுள்ளன” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளை விற்ற அல்லது இறக்குமதிசெய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனையோ $10,000 வரை அபராதமோ விதிக்கப்படக்கூடும்.

எட்டோமிடேட் விரைவில் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்தப்பட்ட ‘சி’ வகை போதைப்பொருளாக வகைப்படுத்தப்படும் என்று அமைச்சும் ஆணையமும் தெரிவித்தன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஜூலை 13ஆம் தேதி மின்சிகரெட் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியது. அதன் பிறகு, மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகப் பிடிபட்டோர் எண்ணிக்கை கூடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்