2024ல் 10,000க்கும் அதிகமான டெங்கிச் சம்பவங்கள்

2 mins read
02995e87-6112-4e0c-bf41-743eac7c7f23
சென்ற ஆண்டு டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 9,949ஆக இருந்தது. அது 2022ஆம் ஆண்டில் பதிவான 32,173 சம்பவங்களைக் காட்டிலும் மிகக் குறைவு.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டிவிட்டது.

சென்ற ஆண்டு முழுமைக்கும் பதிவான எண்ணிக்கையை அது மிஞ்சிவிட்டது.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆக அண்மைய புள்ளிவிவரங்கள், ஜூலை 14க்கும் ஜூலை 22க்கும் இடைப்பட்ட காலத்தில் 267 டெங்கிச் சம்பவங்கள் பதிவானதாகவும், அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு மொத்த டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 10,141ஆகப் பதிவானதாகவும் காட்டின.

சென்ற ஆண்டு டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 9,949ஆக இருந்தது. அது 2022ஆம் ஆண்டில் பதிவான 32,173 சம்பவங்களைக் காட்டிலும் மிகக் குறைவு.

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வழக்கமாக டெங்கிச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய காலகட்டத்தை முன்னிட்டு, டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று வாரியம் முன்னதாக மார்ச் மாதத்தில் எச்சரித்திருந்தது.

சிங்கப்பூரில், ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி, 70 டெங்கிக் குழுமங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் பத்து, சிவப்பு எச்சரிக்கையிலான குழுமங்கள்.

கேஷியூ ரோட்டுக்கு அப்பால் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள வீடமைப்புப் பேட்டை ஒன்றில் ஆகப் பெரிய குழுமம் உள்ளது. அங்கு 410 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஒரு பகுதியில் 103 சம்பவங்களும், பைனியர் பகுதியில் 47 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

குடியிருப்பாளர்கள், குறிப்பாக இத்தகைய டெங்கிக் குழுமங்கள் உள்ள பகுதிகளில் வசிப்போர், வீட்டில் உள்ள இருண்ட மூலைகளில் பூச்சி மருந்துகளைப் போடலாம்; நீண்ட கைச்சட்டைகளையும், நீண்ட கால்சட்டைகளையும் அணிந்துகொள்ளலாம்.

உலகளவில் கடந்த இருபது ஆண்டுகளில் டெங்கித் தொற்று அதிகரித்து வந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் 2023ல் தெரிவித்தது.

சென்ற ஆண்டின் தொடக்கத்திலிருந்து, 80க்கும் மேற்பட்ட நாடுகள் அல்லது பிரதேசங்களில், டெங்கிப் பரவலால் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்களும் 5,000க்கும் மேற்பட்ட டெங்கி தொடர்பான மரணங்களும் பதிவாயின.

குறிப்புச் சொற்கள்