மோசடித் தடுப்பு நிலையம், வங்கிகள் நடத்திய சோதனை: $56மி இழப்பு தவிர்ப்பு

மோசடித் தடுப்பு நிலையம், வங்கிகள் நடத்திய சோதனை: $56மி இழப்பு தவிர்ப்பு

1 mins read
c40460ac-d2a2-4dfa-a882-3528265dbc0f
காவல்துறையிடமிருந்து கிடைத்த குறுந்தகவலுக்குப் பிறகு மட்டுமே, பாதிக்கப்பட்டோரில் பலர் தாங்கள் ஏமாந்துவிட்டதை உணர்ந்தனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

மோசடித் தடுப்பு நிலையமும் நான்கு வங்கிகளும் கூட்டாக இணைந்து நடத்திய இரண்டு மாதச் சோதனை நடவடிக்கையில் 2,700க்கு மேற்பட்ட மோசடிகளும், $56 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்புகளும் தவிர்க்கப்பட்டன.

‘டிபிஎஸ்’, ‘யுஓபி’, ‘ஓசிபிசி’, ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ ஆகியவையே அந்த 4 வங்கிகள் என்று காவல்துறை மார்ச் 6ஆம் தேதி தெரிவித்தது.

வேலைகள், போலி நண்பர் அழைப்புகள், மின்வர்த்தகம் தொடர்பான மோசடிகளில் பாதிக்கப்படக்கூடியவர்களை அடையாளம் காண ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 29ஆம் தேதிவரை நடத்தப்பட்ட அந்தச் சோதனை நடவடிக்கையில், இயந்திரவழிச் செயல்முறைத் தானியக்கத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் சிக்கியிருந்த மோசடிகள் குறித்து குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பணமாற்றுப் பரிவர்த்தனைகளைச் செய்வதிலிருந்து அவர்கள் தவிர்க்கப்பட்டனர்.

அந்தக் குறுந்தகவல் கிடைத்த பிறகு மட்டுமே, பாதிக்கப்பட்டோரில் பலர் தாங்கள் ஏமாந்துவிட்டதை உணர்ந்தனர்.

இரண்டு மாதச் சோதனை நடவடிக்கையின்போது, மோசடித் தடுப்பு நிலையத்தின் அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ள 11,000க்கும் மேற்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு 15,000க்கும் அதிகமான குறுந்தகவல்களை அனுப்பினர்.

இதன் மூலம் $56 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பு தவிர்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிவங்கிகாவல்துறை