நிலப் போக்குவரத்து ஆணையம் சிங்கப்பூர் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்திய அமலாக்கச் சோதனையில் விதிமுறைகளை மீறியதாக 151 மின்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த அமலாக்கச் சோதனையின்போது தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்புடைய 232 குற்றங்களையும் அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
இதுகுறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் விவரங்களை வெளியிட்டது.
மரினா பே, பொங்கோல், கேலாங் உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து நிலப் போக்குவரத்து ஆணையம் சோதனை நடத்தியதாகக் கூறியது.
ஜூன் மாதம் பள்ளி விடுமுறையால் மின்சைக்கிள் பயனீட்டாளர்கள் பலர் சில இடங்களில் ஒன்றுகூடுவதாகத் தகவல் வந்தையையடுத்து அவர்களைக் குறிவைத்து அதிகாரிகள் களமிறங்கினர்.
சோதனையில், அதிவேகச் சக்திகொண்ட இயந்திரங்கள் இருந்த மின்சைக்கிள்கள், பதிவு செய்யப்படாத அல்லது பதிவுத் தட்டுகள் இல்லாத மின்சைக்கிள்கள், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மின்சைக்கிள்கள், வேகக் கட்டுப்பாடு கருவி இல்லாத மின்சைக்கிள்கள் உள்ளிட்டவை பிடிபட்டன.
சரியில்லாத அல்லது பதிவு செய்யப்படாத மின்சைக்கிள்களை ஓட்டுபவர்களுக்கு $1,000 அபராதமோ மூன்று மாத சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இது முதல்முறை இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்குப் பொருந்தும்.
சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மின்சைக்கிள்களை நடைபாதையில் பயன்படுத்தினால் 10,000 வெள்ளி வரையிலான அபராதமோ ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

