சிங்கப்பூர் எல்லைகளில் 1,500க்கு மேற்பட்ட மின்சிகரெட்டுகள் பறிமுதல்

1 mins read
728128b3-8ed2-47d5-bdcf-a6b15518aa08
ஐசிஏ அதிகாரிகள் மின்சிகரெட் மற்றும் அதன் தொடர்பான பொருள்களுக்கான சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். - படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மின்சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் அமலுக்கு வந்த பிறகு, முதல் நான்கு நாள்களில் 1,500க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் அதன் தொடர்பான பொருள்களும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தால் (ஐசிஏ) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் 4ஆம் தேதியன்று, ஒரு ஃபேஸ்புக் பதிவில், செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4 வரை, சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் மின்சிகரெட்டுகளுடன் சம்பந்தப்பட்ட 123 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஐசிஏ தெரிவித்துள்ளது. இதில் சிலர் தானாக முன்வந்து தங்கள் மின்சிகரெட்டுகளை அப்புறப்படுத்தினார்கள்.

“சுமார் 70 விழுக்காட்டு சம்பவங்கள் குறுகிய கால அனுமதி பெற்ற வருகையாளர்களையும் 30 விழுக்காட்டு சம்பவங்கள் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், நீண்ட கால அனுமதி அட்டை வைத்திருப்பவர்களையும் உள்ளடக்கியது,” என்று ஐசிஏ மேலும் கூறியது.

“சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்பாடு சட்டவிரோதமானது. சிங்கப்பூருக்கு வருகை தரும் அல்லது வசிக்கும் வெளிநாட்டினர் சிங்கப்பூரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்,” என்றும் ஐசிஏ வலியுறுத்தியது.

சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் தொடர்பான பொருள்களைக் கடத்தும் முயற்சிகளைக் கண்டறிந்து தடுப்பதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 18 முதல் 22 வரை 850க்கும் மேற்பட்ட மின்சிகரெட் மற்றும் அது தொடர்பான பொருள்கள் ஐசிஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்