செம்பவாங் பலதுறைமருந்தகத்தின் இளம் குடும்பங்களுக்கான சுகாதார, சமூக ஆதரவுத் திட்டத்தின் மூலம் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
ஃபேமிலி நெக்சஸ் அல்லது ஃபேம்நெக்ஸ் திட்டத்தின்கீழ் ‘ஃபேம்நெக்ஸ்@புக்கிட் கேன்பரா’ திட்டம் கடந்த 2023 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
திருமண ஆயத்தம், குழந்தை வளர்ப்புப் பயிலரங்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆதரவு போன்ற பலவற்றுக்கு அத்திட்டம் ஆதரவு வழங்கி வருகிறது.
சுகாதார அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் வேறு சில அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்தை ஏற்படுத்தின.
தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கல்வி, உடல், மனநலம் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்க பெற்றோர்கள் ஆர்வத்துடன் இருப்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரே இடத்திலேயே சமூக, சுகாதாரச் சேவைகளைப் பெற அத்திட்டம் உதவி வருவதாகத் திரு மசகோஸ் குறிப்பிட்டார்.
“சில நேரங்களில் நெக்சஸ் நிலையங்களுக்குத் தங்கள் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கே அதிக உதவி தேவைப்படுகிறது. தாய்மார்களின் பிரச்சினைகளுக்கு விடைகாணும்வரை அக்குழந்தைகளுக்கு ஆதரவும் விளையாட நேரமும் கிடைக்கிறது,” என்று அமைச்சர் சொன்னார்.
இளம் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாண ‘ஃபேமிலி நெக்சஸ்’ இலக்கு கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எடுத்துக்காட்டாக, நிதி நிலைமை அல்லது வேறு காரணங்களுக்காக குழந்தையைப் பராமரிக்க ஒரு குடும்பம் சிரமப்பட்டால், அக்குடும்பம் உரிய அமைப்புகளைத் தொடர்புகொள்ள ஃபேம்நெக்ஸ் உதவும்.
குழந்தைகளின் வளர்ச்சி குறித்து மதிப்பிடவும் இளம் குடும்பங்களுக்கு ஃபேம்நெக்ஸ் ஆதரவு வழங்குகிறது.
அதிகமான இளம் தம்பதியர், குழந்தைகள், குடும்பங்கள் உள்ள பகுதிகளுக்கு ஃபேம்நெக்ஸ் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.