மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் $169,000க்கும் மேல் மதிப்புள்ள போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நடைபெற்றது.
மோட்டார் சைக்கிளில் அதிகாரிகள் சோதனையிட்ட போது 4,648 கிராம் கஞ்சா, 542 கிராம் ஐஸ் போதைப்பொருள், 250 எர்மின்-5 போதை மாத்திரைகள் போன்றவை சிக்கின.
அந்தப் போதைப்பொருள்களின் அளவு ஏறத்தாழ 970 போதைப் புழங்கிகளுக்கு ஒரு வார காலம் வரை போதுமானது.
இதனை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் (CNB - சிஎன்பி) குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் வியாழக்கிழமை (ஜனவரி 16) வெளியிடப்பட்ட தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்தன.
முதலில் அந்த மோட்டார் சைக்கிளில் தொங்கிக்கொண்டு இருந்த கறுப்புப் பொட்டலம் சந்தேகத்தைக் கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து சிஎன்பி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மோட்டார் சைக்கிளின் பல்வேறு பகுதிகளில் அந்த போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டனர்.
அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 21 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்குள் 500 கிராம் கஞ்சா அல்லது 250 கிராம் மெத்தம்ஃபேட்டமைன் போதைப்பொருளைக் கடத்தி வருவோர் அல்லது இங்கிருந்து வெளியே கடத்துவோர் மரண தண்டனையை எதிர்நோக்குவர்.
“சிங்கப்பூர் எல்லைகளின் வாயிலாக போதைப்பொருள் கடத்தி வரப்படும் முயற்சிகளை முறியடிக்க மத்திய போதைப் பொருள் பிரிவுடன் இணைந்து குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரிகள் பணியாற்றுவர்,” என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.