மலேசிய நடிகரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை

1 mins read
97b09e0e-15ca-4e5f-ad48-01baaad5cdd3
தாக்குதலுக்குப் பிறகு மலேசிய நடிகர் கமால் அட்லி, சாங்கி பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துசெல்லப்பட்டார். - படங்கள்: ரோஸ்லான் ஷா, சிங்கப்பூர் காவல்துறை

சென்ற ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர் எக்ஸ்போவில் ரசிகர் கூட்டம் ஒன்றின்போது தடி ஒன்றைப் பயன்படுத்தி மலேசியப் பிரபலம் ஒருவரைத் தாக்கிய ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முகம்மது நபில் ரஷித் என்பவர் அந்தக் குற்றத்தைப் புரிந்தார். தமது பெண் உறவினரை கமால் அட்லி என்று பிரபலமாக அறியப்படும் திரு அகமது கமால் அகமது அட்லி, 36, மானபங்கம் செய்ததாக நபில் தவறாக எண்ணி அவரைத் தாக்கினார்.

சிங்கப்பூரரான நபில், 34, தாக்கியதற்காக ஒரு குற்றச்சாட்டையும், மற்றொருவரிடம் பலவந்தமாக நடந்துகொண்டதற்காக இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு மார்ச் 12ஆம் தேதி திரு அகமது சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற ரசிகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவருடைய வருகை குறித்து சமூக ஊடகத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது.

திரு அகமது தமது உறவினரை மானபங்கம் செய்ததாக நம்பிய நபில் அந்த நிகழ்ச்சிக்குச் சென்று அவரைத் தாக்கினார். பொதுமக்களும் திரு அகமதின் குடும்பத்தாரும் நபிலைத் துரத்திப் பிடித்தனர்.

அதன் பின்னர் காவல்துறையினர் நபிலைக் கைதுசெய்தனர். இருவரும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

திரு அகமதுக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்றுக்கு நான்கு தையல்கள் போடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்