எதிர்காலத்திற்குத் தயாராகவுள்ள ஊழியரணியை உருவாக்க, 200க்கும் மேற்பட்ட புதிய செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகள் புதன்கிழமை (செப்டம்பர் 16) தொடங்கப்பட்டுள்ளன.
அவை ஊழியர்களின் வாழ்க்கைத்தொழில் வளர்ச்சியை உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணியிட உற்பத்தித்திறனை அதிகரிப்பது முதல், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வளர்த்துக் கொள்வது வரை பல்வேறு கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளதாகப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்புத் தெரிவித்துள்ளது.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’, ‘வொர்க்ஃபோர்ஸ் சிங்கப்பூர்’ ஆகிய அமைப்புகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் முதல் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திருவிழா இது.
முக்கியத் திட்டம், சலுகை
செப்டம்பட் 16ஆம் தேதி முதல், 18 வயதை எட்டிய தகுதியுடைய சிங்கப்பூரர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்புப் பயிற்சிகளில் பங்கேற்கும்போது, ‘சாட்ஜிபிடிபிளஸ்’, ‘கூகல்ஏஐபிரோ’, ‘சிங்டெல் ஏஐ பாஸ்’ போன்ற முதன்மைச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை ஆறு மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம்.
பாயா லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில், ‘கனெக்ட்’ எனும் புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது வேலைதேடுவோருக்குக் கற்றல், வாழ்க்கைத்தொழில் வழிகாட்டல், வேலைவாய்ப்பு ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்கும் என ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், முதலாளிகளுக்காக ‘அவர்வொர்க்ஃபோர்ஸ்’ எனும் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட தளம் தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பதுடன் வேலைகளை மறுவடிவமைக்கவும் செயற்கை நுண்ணறிவைச் திறம்படப் பயன்படுத்தவும் துணைபுரிகிறது.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங், தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைகளின் தன்மையும் தேவையான திறன்களும் நிச்சயம் மாற்றமடையும் எனக் கூறினார்.
மேலும்,“செயற்கை நுண்ணறிவால் எதிர்காலத்தில் வேலைகள் அதிகரிக்குமா குறையுமா என்பதற்குத் தற்போதைய நிலையில் யாராலும் பதிலளிக்க முடியாது. ஆனால், நமது இன்றைய வேலைகளின் தன்மை முற்றிலும் மாறிவிடும் என்பது உறுதி,” என்றார் பிரதமர்.
மாற்றங்களைத் தடுக்க முடியாது என்றும் கற்றுக் கொள்ளவும் தங்களை மாற்றியமைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில், தற்காலிக மனிதவள அமைச்சர் ஜாஸ்மின் லாவ், கல்வி, நீடித்தநிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளின் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி, நிதி, மனிதவள அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
