சிங்கப்பூரின் தற்காப்புக்குப் பங்களித்துள்ள அனைத்து முன்னாள், இந்நாள் தேசிய சேவையாளர்களுக்கு 180க்கு மேற்பட்ட வர்த்தகங்களில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
உணவு, வாழ்க்கைமுறை சார்ந்த பொருள்கள், சேவைகள் எனத் தேசிய சேவையாளர்களும் சாஃப்ரா உறுப்பினர்களும் கட்டணக் கழிவு மற்றும் இலவச அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
வழங்கப்படும் மொத்தம் 220 சலுகைகளில் பெரும்பாலானவை, சிங்கப்பூர் ஆயுதப்படை தினமான ஜூலை 1ஆம் தேதி தொடங்கும்.
இந்தச் சிறப்புச் சலுகைகளில் பல, ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு முடிவடையும் என்று சாஃப்ரா ஜூன் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
நாட்டின் 40 ஆண்டுகால தேசிய தற்காப்பு இயக்கமானது ‘முழுமைத் தற்காப்பு’. அதனைக் கடைப்பிடிக்கும் வகையில் தேசிய சேவையாளர்களின் பங்களிப்பைக் கொண்டாடுவதற்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அதனை முன்னிட்டு சுவா சூ காங்கில் புதிதாகத் திறந்துள்ள சாஃப்ரா பொழுதுபோக்கு மனையில் ஜூன் 30ஆம் தேதி வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தம் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியுடன் கலந்துகொண்டார். அவர்களுடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தற்காப்பு மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது ஆகிய இருவரும் வருகை புரிந்திருந்தனர்.
சாஃப்ரா புரவலரான திரு தர்மன், முழுமைத் தற்காப்புக்குக் கடப்பாடு தெரிவிக்கும் தமது தனிப்பட்ட உறுதிமொழி ஒன்றை எழுதினார்.
தொடர்புடைய செய்திகள்
சலுகைப் பட்டியலுக்கு, safra.sg/appreciationdeals என்ற இணையப்பக்கத்தை அணுகலாம்.

