தனியார் வாடகைக் கார் ஓட்டுநரான 34 வயது சுவா, கடந்த நவம்பர் மாதம் தாம் காரை வாடகைக்கு எடுத்த ‘ஆட்டோபான் ரென்ட் எ கார்’ நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதை அறிந்தார்.
அதுகுறித்து அந்நிறுவன விற்பனைப் பிரிவு ஊழியரிடம் கேட்டபோது, வர்த்தகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது என அந்த ஊழியர் திரு சுவாவுக்கு உறுதியளித்தார்.
தம்முடைய வாழ்வாதாரத்திற்கு காரை மட்டுமே நம்பிருந்த திரு சுவா, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்நிறுவனத்திடமிருந்து காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்தார்.
இந்நிலையில், அந்நிறுவன ஊழியர் அவருக்கு அளித்த வாக்குறுதி வெறும் பயனற்றப் பேச்சு எனப் பின்னர் அவர் அறிந்தார்.
அந்நிறுவனமும் அதன் தொடர்புடைய வர்த்தகமும் கடன் வழங்குநர்களிடமிருந்து $300 மில்லியனுக்கும் அதிகமாகப் பணத்தைக் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
டிசம்பர் 26ஆம் தேதி, கடன் வழங்குநர்களிடமிருந்து தங்களுடைய சொத்துகளைப் பாதுகாக்க அந்நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
அதுகுறித்த தகவல் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது எனும் அறிவிப்பு வெளியானது.
இதனால், திரு சுவா வேறு வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நாளொன்றுக்கு $200 ஈட்டிய அவர், தற்போது கிட்டத்தட்ட $110 ஊதியம் தரும் வேலையில் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரு சுவா போன்ற ஓட்டுநர்கள், காரை வாடகைக்குவிடும் தொழிலில் ஈடுபட்ட சில பெருநிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் தொடக்கத்தில், ‘எஸ்ஆர்எஸ் ஆட்டோ’ நிறுவனம் பணமோசடி நடவடிக்கைகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
2025ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நிலவரப்படி, ஓட்டுநர்கள் இல்லாமல் கார்களை வாடகை, குத்தகைக்கு விடும் தொழிலில் 1,634 நிறுவனங்கள் ஈடுபட்டதாக சிஎன்ஏவிடம் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் டிசம்பர் 24ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவற்றில் 227 நிறுவனங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன.
பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு ஆதரவு வழங்கத் தேவையான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசும் நிலப் போக்குவரத்து ஆணையமும் கிராப், கம்ஃபர்ட்டெல்குரோ,ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர் ஆகிய நிறுவனங்களும் ஜனவரி 7ஆம் தேதி தெரிவித்தன.
“இந்தச் சூழ்நிலை பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அவர்களில் பலரை நாங்கள் தொடர்புகொண்டுள்ளோம். ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தங்கள் வாகனங்களைச் சார்ந்துள்ளனர். அதனால் அப்பிரச்சினையை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கருதுகிறோம்,” எனத் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் உதவிப் பொதுச்செயலாளர் இயோ வான் லிங் கூறினார்.

