துவாஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்ட மலேசிய லாரி

2,200க்கும் மேற்பட்ட மின்சிகரெட் பொருள்கள் பறிமுதல்

1 mins read
47e198dc-c1a0-4428-badf-88ecc7cb58d3
சிங்கப்பூர் நிலச் சோதனைச்சாவடிகளில் ஜூன் 27ஆம் தேதியிலிருந்து சுமார் 18,000 மின்சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. - காணொளிப் படம்: ஐசிஏ / ஃபேஸ்புக்

துவாஸ் சோதனைச்சாவடியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி 2,200 மின்சிகரெட் பொருள்களை மறைத்து வைத்திருந்த லாரியொன்று பிடிபட்டது.

மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரியைக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவை சிக்கின.

சம்பவம் குறித்துச் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) கூறியது.

சிங்கப்பூர் நிலச் சோதனைச்சாவடிகளில் பிடிபட்ட ஆக அண்மை மின்சிகரெட்டுகள் அவை.

ஜூலை 29ஆம் தேதி, துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாகச் சிங்கப்பூருக்குள் நுழைந்த லாரியில் 2,400 மின்சிகரெட் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதற்குச் சில நாள்களுக்கு முன்னர் ஜூலை 24ஆம் தேதி, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 5,900க்கும் மேற்பட்ட மின்சிகரெட் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

ஜூன் 27ஆம் தேதியும் ஜூலை 8ஆம் தேதியும் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக 7,400க்கும் அதிகமான மின்சிகரெட் பொருள்களைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

அண்மை ஆண்டுகளில் கூடுதலான அத்தகைய கடத்தல் முயற்சிகள் வெளிச்சத்திற்கு வந்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2023ஆம் ஆண்டில் 43,000 கடத்தல் முயற்சிகளும் 2024ல் 44,000 கடத்தல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.

சென்ற ஆண்டு (2024) ஜனவரி மாதத்திலிருந்து இவ்வாண்டு மார்ச் வரை, சுகாதார அறிவியல் ஆணையம் $41 மில்லியன் பெறுமான மின்சிகரெட்டுகளைக் கைப்பற்றியது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குத் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டுக்கும் 2023க்கும் இடையில் பிடிபட்ட மின்சிகரெட்டுகளைப் போன்று அது ஐந்து மடங்கு.

குறிப்புச் சொற்கள்