அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்வோரின் மோசடிகளுக்கு எதிராக தீவுமுழுவதும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 30க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் 240க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதற்காக மோசடிக்காரர்களுக்குத் தங்கள் வங்கிக் கணக்குகளைத் தந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் சோதனையில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை, ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
27 ஆடவர்களும் ஏழு பெண்களும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோசடிக் குற்றவாளிகளால் இழக்கப்பட்ட பணத்தை மீட்க, வர்த்தக விவகாரப் பிரிவுக்கான மோசடி எதிர்ப்பு தளபத்தியத்தின் அதிகாரிகள், மார்ச் 17 முதல் 28 வரையிலான சோதனை நடவடிக்கையின்போது உள்ளூர் வங்கிகளுடன் இணைந்து பணியாற்றினர்.
மோசடியால் பறிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் குறைந்தது 955,000 வெள்ளி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஐவர் விசாரிக்கப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து 700க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறையினரின் தகவல்படி, அரசாங்க அதிகாரிகளைப்போல் ஆள்மாறாட்டம் செய்யும் 1,504 சம்பவங்கள் 2024ல் நேர்ந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், 151.3 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்தனர்.

