ரயில் கட்டமைப்பின் விரிவாக்கத்துக்கும் பேருந்துச் சேவைகளின் மேம்பாடுகளுக்கும் ஏற்ப, வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துத் துறையில் 3,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஜூன் 29ஆம் தேதி திறக்கப்படவுள்ள புதிய பொங்கோல் கோஸ்ட் பேருந்து சந்திப்பு நிலையத்தில் செவ்வாய்கிழமை (மே 20) செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் இதை அறிவித்தார்.
பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், இயோ வான் லிங் ஆகியோர் அவருடன் வருகை தந்திருந்தனர்.
ஏறத்தாழ 2,000 வேலைகள் ரயில் துறையிலும் 1,000க்கும் மேற்பட்டவை பேருந்துத் துறையிலும் உருவாக்கப்படும் என்று திரு சீ தெரிவித்தார்.
ரயில் துறைக்குத் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், தரவுப் பகுப்பாய்விலும் இணையப் பாதுகாப்பிலும் திறமை வாய்ந்த நிபுணர்கள் முதலியோர் அதிகம் தேவைப்படுவார்கள்.
இவை, 2027 முதல் 2029 வரை கட்டங்கட்டமாகத் திறக்கப்படவுள்ள ஜூரோங் வட்டார ரயில் பாதை, 2030க்குள் முதல் 12 நிலையங்களுடன் இயங்கத் தொடங்கவுள்ள குறுக்குத் தீவு ரயில் பாதை போன்ற புதிய திட்டங்களை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் தயாரிப்புகளாகும்.
பேருந்துத் துறையில் பேருந்து ஓட்டுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் தேவைப்படுவார்கள். குறிப்பாக, மின்சாரப் பேருந்துகளைக் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2030க்குள் பொதுப் பேருந்துகளில் பாதியளவை மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளாக மாற்ற அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
2024 ஜூலையில் தொடங்கப்பட்ட $900 மில்லியன் மதிப்பிலான பேருந்து இணைப்பு மேம்பாட்டுத் திட்டம், புதிய வட்டாரங்களில் வசிப்பவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
திறமை வாய்ந்தவர்களை இத்துறைகளுக்கு ஈர்க்க, அரசாங்கம் தேசியப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும். புதிய பட்டதாரிகளுக்கும் இடைக்காலப் பணி ஊழியர்களுக்கும் ஆரம்ப ஊக்கத்தொகை, பரிந்துரைத் திட்டங்கள், வேலை தொடர்புடைய கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும்.
போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத் தேவைகள் தொடர்ந்து வளர்ந்து வருவதைச் சுட்டிய திரு சீ, பராமரிப்பு, முடிவெடுக்கும் செயல்பாடுகளில் தரவுப் பகுப்பாய்வைப் பயன்படுத்துவதிலும் புதிய தொழில்நுட்பங்களிலும் மாணவர்கள் காட்டும் ஆர்வத்தை சுட்டிக்காட்டினார்.
“இது மிகவும் அர்த்தமுள்ள தொழில்துறையாகும். ரயில் பாதைகள், பேருந்துச் சேவைகள் விரைவாக விரிவடையும் இந்தக் கட்டத்தில், மேலும் பல சிங்கப்பூரர்கள் பொதுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்ற எங்களுடன் இணைவார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்,” என அவர் கூறினார்.
சிங்கப்பூரில் மின்சார வாகனங்களின் அதிகரித்துவரும் பயன்பாடு தொடர்பாக பேசிய திரு சீ, இது ஒரு நல்ல போக்கு என்றார்.
2025 முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களில் 40.2 விழுக்காடு மின்சார வாகனங்களாக இருந்தன.
தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்பட்டுவரும் நிலையில், மின்சார வாகனங்களின் விலை மேலும் குறையும் என்றும் அதேசமயம் அவற்றின் மின்கலன் செயல்திறன் மேம்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மின்னூட்ட இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட மின்சார வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து கேட்கப்பட்டபோது, “பிரதமரின் முடிவை ஏற்று, எனக்கு வழங்கப்படும் எந்தப் பதவியையும் முழுமனதுடன் செய்வேன்,” என்று திரு சீ கூறினார்.