சிங்கப்பூரில் செயல்படும் 300,000க்கும் அதிகமான நிறுவனங்கள் நவம்பருக்குள் வரியைத் தாக்கல் செய்ய வேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரித்துள்ளது.
நிறுவனங்கள் வரி சமர்ப்பிப்புக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் ஆணையம் நினைவூட்டியுள்ளது.
வரி சமர்ப்பிப்பு நடவடிக்கைக்கு நிறுவனங்களின் இயக்குநர்கள் தான் பொறுப்பு. அவர்கள் சரியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், முதல்முறையாக வரிகளைத் தாக்கல் செய்யும் 37,000க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களுக்கு உள்நாட்டு வருவாய் ஆணையம் உதவிகளை வழங்கி வருகிறது.
வரிகளை எப்படித் தாக்கல் செய்வது, ஆவணங்களை எவ்வாறு கையாள்வது, வருமான வரியைப் பதிவு செய்வது, ஆவணங்களைத் தாக்கல் செய்த பிறகு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் எனப் பலவற்றை இணையம் மூலம் நிறுவனங்களுக்கு ஆணையம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கற்பித்தது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கிட்டத்தட்ட 4,500 நிறுவனங்கள் சரியான நேரத்தில் வரிகளைத் தாக்கல் செய்யாததால் தண்டிக்கப்பட்டன.
காலக்கெடுவுக்குள் வரிகளைத் தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும். விதிமுறைகளைச் சரிவரப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு ஒரு நாளுக்கு 100 வெள்ளியென அபராதம் விதிக்கப்படும்.