வேலையிடங்களில் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் ஏழு இடங்களில் வேலைநிறுத்த உத்தரவு பிறபிக்கப்பட்டதாகவும் $360,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 335 கட்டுமானத் தளங்களில் தமது அதிகாரிகள் சோதனை நடத்தியதாக அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
அப்போது, 800 விதமான வேலையிடப் பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகவும் அது தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு எல்லாத் துறைகளின் வேலையிடங்களிலும் 587 படுகாயச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 2023ஆம் ஆண்டு பதிவான 590ஐக் காட்டிலும் அது சற்று குறைவு.
உயிரிழப்பை ஏற்படுத்தாத கடுமையான காயங்களில் கை, கால் போன்ற உறுப்புகளைத் துண்டித்தல், பார்வையிழப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுபடுத்துதல் போன்றவை அடங்கும் என அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வருடாந்திர அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
படுகாயங்கள் நிகழ்ந்த சம்பவங்களில் 60 விழுக்காடு சிறிய கட்டுமானத் தளங்களில் ஏற்பட்டவை என்று அமைச்சு கூறியது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு கட்டுமானத் துறையில் அதுபோன்ற காயங்கள் 2 விழுக்காடு குறைந்தன.
அதேநேரம், வேலையிட மரணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு 36 உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 43க்கு அதிகரித்தது. கட்டுமானத் துறையில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
வேலையிடப் பாதுகாப்பு என்பது சாக்குப்போக்குக்கு உரிய அம்சமன்று என்று குறிப்பிட்டுள்ள அமைச்சு, குத்தகையாளர்கள் தங்களுக்கான கட்டுமான அளவைக் கணக்கில் கொள்ளாமல் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை நடப்பில் வைக்க வேண்டும் என்றும் அதனை ஊழியர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

