இணையவழி பாதுகாப்பு ஆணையத்திற்கு இரு மாதங்களில் 500க்கும் மேற்பட்ட புகார்கள்

இணையவழி பாதுகாப்பு ஆணையத்திற்கு இரு மாதங்களில் 500க்கும் மேற்பட்ட புகார்கள்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Sep 2026 - 1:51 pm

2 mins read

இணையவழிப் பாதுகாப்பு ஆணையம் (Online Safety Commission), சேவை தொடங்கிய இரு மாதங்களுக்குள் 500க்கும் மேற்பட்ட இணையத் தீஙகு தொடர்பான புகார்களைப் பெற்றுள்ளது.

கவனிக்கத்தக்க புகார்களில் ஐந்தில் ஒரு பங்கு, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களைப் பற்றியது. இதில், தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி இணையத்தில் வெளியிடும் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஏழு வயதுச் சிறுவனும் அடங்குவான் என்றும் ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

எனினும், மொத்தப் புகார்களில் எத்தனை கவனித்தக்கவை என்ற விவரத்தை ஆணையம் வெளியிடவில்லை.

இணையத்தளங்களின் மெத்தனமான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான தீர்வை வழங்கி, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உடனடியாக அகற்ற கட்டாயப்படுத்தும் சட்டபூர்வ அதிகாரத்துடன் ஜூன் மாதம் ஆணையம் தன் செயல்பாடுகளைத் தொடங்கியது.

40 ஊழியர்களைக் கொண்ட ஆணையம் முதற்கட்டமாக இணையவழித் துன்புறுத்தல், இணையம்வழி விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல், தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி இணையத்தில் வெளியிடுதல் (doxing), சம்மதமின்றி அந்தரங்கப் படங்களைப் பரப்புதல், புகைப்படங்கள் அடிப்படையிலான குழந்தைத் துன்புறுத்தல் ஆகிய ஐந்து முக்கியப் புகார்களைக் கையாள்கிறது.

இதில் அனுமதியின்றித் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது, இணையம்வழி விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து தொடர்பான புகார்கள் அதிகளவில் பெறப்பட்டுள்ளன. ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையில் புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.

கவனிக்கத்தக்க புகார்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. புதிய இணையவாசிகள் பாதுகாப்பு (நிவாரணம், பொறுப்பேற்பு) சட்டத்தின்கீழ், ஆணையத்தின் உத்தரவுகளை மீறும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக் போன்ற தளங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் கடுமையான அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

தனிநபர்களுக்கு $20,000 வரை அபராதமும் 12 மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். நிறுவனங்களுக்கு $500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். தவறு தொடர்ந்தால் நாளொன்றுக்கு $50,000 வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படலாம். உத்தரவுகளுக்குப் பணியாத இணையத்தளங்களை முடக்கும் ஆணையைப் பிறப்பிக்கவும் வழிவகை உள்ளது.

ஆணையத்தின் விரைவான நடவடிக்கையால், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் 1,000க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆபாசப் போலிப் படங்கள் பல இணையத்தளங்களிலிருந்து அகற்றப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில், சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்களை ஒருவர் எதிர்கொண்டார். சம்பந்தப்பட்ட கணக்குகளை முடக்குமாறு ஆணையம் சமூக ஊடகங்களுக்கு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர் ஆலோசனையும் வழிகாட்டலும் பெற ‘ஷீகெர்ஸ்’ (SHECARES) தொண்டு நிறுவனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இணையம்தொல்லைஇணையப் பாதுகாப்புகுற்றம்ஆணையம்சிறுவர்புகார்