சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகள், போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் ஆகியவற்றை விற்பனை அல்லது விளம்பரம் செய்யும் 600க்கும் மேற்பட்ட ‘டெலிகிராம்’ குழுக்கள் அகற்றப்பட்டுள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ‘டெலிகிராம்’ குழுக்களை அகற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார அறிவியல் ஆணையம் மின்சிகரெட்டுகள் தொடர்பாக எத்தனை ‘டெலிகிராம்’ குழுக்கள் அகற்றப்பட்டுள்ளன என்பதை முதல்முறையாக அறிவித்துள்ளது.
இவ்வாண்டு மே மாதம் சுகாதார அறிவியல் ஆணையம் இணைய வர்த்தகத்தில் விற்பனை பட்டியலில் பட்டியலிடப்பட்ட 6,800க்கும் அதிகமான மின்சிகரெட்டுகள் சார்ந்த பொருள்களை அகற்றியதாகத் தெரிவித்தது.
2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை இந்த நடவடிக்கையில் அது இறங்கியதாகக் குறிப்பிட்டது.
2023ஆம் ஆண்டும் இதேபோல் இணைய வர்த்தகத்தில் விற்பனை பட்டியலில் பட்டியலிடப்பட்ட 3,100க்கும் அதிகமான மின்சிகரெட்டுகள் சார்ந்த பொருள்களைச் சுகாதார அறிவியல் ஆணையம் அகற்றியது.
முதலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் கரோசல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திய அதிகாரிகள் தற்போது டெலிகிராமில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.