தேசிய மனநல சிகிச்சைத் திட்டத்தில் 630க்கும் மேற்பட்ட பொதுநல மருத்துவர்கள்

தேசிய மனநல சிகிச்சைத் திட்டத்தில் 630க்கும் மேற்பட்ட பொதுநல மருத்துவர்கள்

சிங்கப்பூரில் 23 பலதுறை மருந்தகங்கள் மனநலப் பராமரிப்புச் சேவைகளை வழங்குகின்றன
படம்: எஸ்பிஹெச் ஊடகம்

23 Mar 2026 - 3:30 pm

2 mins read

சிங்கப்பூரில் மனநலத்துக்கான அடிப்படை பராமரிப்பு வசதிகள் விரிவாக்கம் அடைந்துள்ளன.

குறைந்த விலையில் மனநல மருந்துகள் வழங்குவதோடு, சிக்கலான மனநலப் பிரச்சினையுடைய நோயாளிகளைக் கவனிக்க உதவியும் ஆதரவும் நல்கும் பொதுநல மருத்துவர்களின் (GPs) எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு இறுதியில் 630க்கும் மேல் கடந்துள்ளது.

அது 2024ஆம் ஆண்டில் இருந்த 520 மருந்தகங்கள் என்ற எண்ணிக்கையைவிட அதிகமாகும். இந்தத் தரவுகள் சுகாதார அமைச்சிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

சிக்கலான மனநலப் பிரச்சினை கொண்ட நோயாளிகளை அடையாளம் கண்டு பரிசோதித்துப் பராமரிக்க 2012ஆம் ஆண்டில் ஒரு திட்டத்தை பொதுநல மருத்துவர்களுடன் அரசாங்கம் தொடங்கியது.

மனநல ஆரோக்கிய பொதுநல மருத்துவர் பங்காளித்துவத் திட்டம் (MHGPP) என்று அதற்குப் பெயரிடப்பட்டது. அத்திட்டத்தில் தற்போது இந்த 630க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இணைந்துள்ளன.

அதேசமயத்தில் இங்கு செயல்படும் 28 பலதுறை மருந்தகங்களில் 23 மருந்தகங்கள் மனநலப் பராமரிப்புச் சேவைகளை வழங்குகின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து பலதுறை மருந்தகங்களும் அத்தகைய மனநலப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் என்று சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது. பலதுறை மருந்தகங்களின் எண்ணிக்கையும் 2030ஆம் ஆண்டுக்குள் 32 என விரிவாக்கம் காணவுள்ளது.

இந்த வளர்ச்சியானது தேசிய மனநலம், நல்வாழ்வு உத்திப்பூர்வ திட்டத்தின் ஓர் அங்கமாகும். அத்திட்டப்படி, அதிக பராமரிப்பு வசதிகள் சமூகத்தை அடையவேண்டும் என்பது நோக்கம்.

சிங்கப்பூரில் ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின்கீழ் நோய்த் தடுப்புக்கான முன்முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி நோயாளிகளின் பராமரிப்புக்கான ஆதார அடிப்படையிலான வழிகாட்டுதல்கள், சமூகத்தில் உள்ள வளங்கள் குறித்த தகவல்கள் ஆகியன பங்கெடுக்கும் பொதுநல மருத்துவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பெரும் மனச்சோர்வு, பதற்றம் போன்ற நோய்களுக்கான பராமரிப்பு நெறிமுறைகளைச் சுகாதார அமைச்சு வகுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்