சிங்கப்பூரின் மிகப் பெரிய பணமோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட தனிநபர்கள், சில அறநிறுவனங்களுக்கு வழங்கிய நன்கொடைகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அறநிறுவன ஆணையரின் பரிந்துரைகள்படி, அந்த நன்கொடைகளை காவல்துறையிடம் ஒப்படைத்ததாக மே 18ஆம் தேதி அதிபர் சவாலும், சமூக உண்டியலும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து சமூக உண்டியலுக்கு $30,000ம், அதிபர் சவாலுக்கு $350,000க்கும் மேல் கிடைத்தன. இரண்டு அமைப்புகளும் நன்கொடை வழங்கியவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை.
இதற்கிடையே, வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து பெற்ற அனைத்து நன்கொடைகளையும் சென்ற ஆண்டு அக்டோபரில் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக சியென் சே மருத்துவக் கழகம் கூறியது.
2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை, சு ஹைஜின் அந்த சமூக சேவை அமைப்புக்கு மொத்தம் $101,000 நன்கொடை வழங்கினார். 2021 முதல் 2023 வரை, சு பாவ்லின் மொத்தம் $39,000 நன்கொடையும், 2021ல் ஸாங் ருயிஜின் $12,000 நன்கொடையும் வழங்கினார்கள்.
2020ஆம் ஆண்டில் சு ஹைஜின், சு பாவ்லின், ஸாங் ருயிஜின் ஆகிய ஒவ்வொருவரிடமிருந்தும் $100,000 காசோலைகளைப் பெற்றதாக முன்னதாக நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சியென் சே மருத்துவக் கழகம் கூறியது. அந்தப் பணம் அதிபர் சவாலுக்கு வழங்கப்பட்டது.
வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் குறைந்தது ஆறு அறநிறுவனங்களும் சமூக சேவை அமைப்புகளும் நன்கொடைகள் பெற்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் தகவல் தெரிவித்தது.

