சிங்கப்பூரில் நடக்கும் வெவ்வேறு குற்றங்கள் தொடர்பான இணைய நடவடிக்கைகளை அகற்றும்படி அரசாங்கத்தால் உத்தரவிடமுடியும் என்றாலும், இணையத்திலிருந்து அகற்றப்படவேண்டிய மிகப் பொதுவான குற்றச்செயல் மோசடிகள் தொடர்பானவை.
இணையக் குற்றவியல் தீங்குகள் சட்ட அலுவலகத்தின்கீழ் அகற்றப்பட்ட இணையக் குற்ற உள்ளடக்கங்களில் பத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்டவை மோசடி இணையத்தளங்கள், விளம்பரங்கள், பட்டியல்கள், கணக்குகள் ஆகியவையாகும் என்று அலுவலகத்தின் இயக்குநரான உதவி ஆணையர் மார்க் இ கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி இணையக் குற்றவியல் தீங்குகள் சட்டம் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து, முதல் முறையாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்தச் சட்டம் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்வழி, குற்ற நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் வெளிப்படுத்தப்படுவதைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும், சமூக ஊடகத்திற்கும் மின் வர்த்தகத் தளங்களுக்கும் அரசாங்கத்தால் உத்தரவுகளைப் பிறப்பிக்கமுடியும்.
சட்டத்தின்கீழ், ஓர் இணைய நடவடிக்கை, குறிப்பிட்ட குற்றச்செயலுடன் தொடர்பு இருப்பதற்கான நியாயமான சந்தேகம் எழுந்தால், உத்தரவுகள் எந்தவோர் இணையச் சேவை வழங்குநர், தனிநபர் அல்லது அமைப்புக்கும் பிறப்பிக்கப்படலாம்.
பயங்கரவாதம் தொடர்பானவை, உள்நாட்டு, இன, சமய நல்லிணக்கம், போதைப்பொருள், வன்முறை, மோசடிகள் ஆகியவை குறிப்பிட்ட குற்றச்செயல்களாகும்.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிடப்பட்ட காவல்துறையின் வருடாந்தரப் புள்ளிவிவரங்களில், 2025ஆம் ஆண்டில் மோசடிகள் காரணமாக, 913 மில்லியன் வெள்ளிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது. ஆனால், அது அதற்கு முந்தைய ஆண்டில் ஏற்பட்ட 1.1 பில்லியன் வெள்ளி இழப்பைக் காட்டிலும் குறைவு.
தொடர்புடைய செய்திகள்
மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையும் குறைந்தது. 2024ஆம் ஆண்டில் 51,501ஆக இருந்த அது, 2025ஆம் ஆண்டில் 37,308ஆகச் சரிந்தது.

