சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 1.06 மில்லியன் சட்டவிரோத சுகாதாரப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்தது.
கைப்பற்றப்பட்ட அந்தப் பொருள்களின் மதிப்பு $750,000 என்றும் இது அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 10 விழுக்காடு அதிகம் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகளிடம் சிக்கிய சட்டவிரோத சுகாதாரப் பொருள்களில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 56 விழுக்காடு, இருமல் மருந்துகள்.
சட்டவிரோதப் பொருள்களின் கலவையில் தயாரிக்கப்பட்ட உணர்விழக்கும் மருந்துகளும் வலி நிவாரணிகளும் 17 விழுக்காடு மற்றும் பாலியல் தூண்டல் மருந்துகள் 19 விழுக்காடு எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவை தவிர, இணைய வர்த்தகத் தளங்கள் மற்றும் சமூக ஊடகத்தளங்களின் விற்பனைப் பட்டியலில் இருந்து 2,300க்கும் அதிகமான சட்டவிரோத சுகாதாரப் பொருள்கள் 2025ஆம் ஆண்டு நீக்கப்பட்டதாகவும் அது கூறியது.
அவ்வாறு நீக்கப்பட்ட பொருள்கள் 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் பெருமளவு குறைந்தன. அந்த ஆண்டில் 7,190 சட்டவிரோதப் பொருள்கள் இணைய வர்த்தகப் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டன.
அத்தகைய பொருள்களைக் கண்காணிக்க தானியக்க மற்றும் கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
அதுபோன்ற சட்டவிரோதப் பொருள்களை விற்பனைப் பட்டியலில் வைக்கக்கூடாது என்று கிட்டத்தட்ட 1,400 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
முடி உதிர்தலைத் தடுக்கும் மருந்துகள், முகப்பருவை நீக்கும் மருந்துகள் போன்ற பல்வேறு சுகாதாரப் பொருள்கள் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டு இணையத்தில் விற்கப்படுவதற்கு எதிரான எச்சரிக்கைகள் அவை.
சட்டவிரோதப் பட்டியல்களை நீக்க இணையத்தள நிர்வாகங்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான காலகட்டத்தில் ‘ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்’ என்று கூறி விற்கப்பட்ட சுகாதாரப் பொருள்களை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி ஒன்பது பேர் எடுத்துக்கொண்டது தெரியவந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

