பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு $3.1 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 16 ஆடவர்களும் எட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதினாறு முதல் 51 வயதுக்குட்பட்ட இவர்கள்மீது, மோசடி தொடர்பான பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் பிப்ரவரி 2 முதல் 6ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சுமத்தப்படவுள்ளன.
ஏமாற்றுவதற்கு உடந்தையாக இருத்தல், குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த ஆதாயங்களைப் பெறுதல், குற்றவியல் நடவடிக்கையிலிருந்து கிடைத்த ஆதாயங்களைத் தக்கவைக்க மற்றவர்களுக்கு உதவுதல், கணினித் தரவுகளை அத்துமீறி அணுக உடந்தையாக இருத்தல், கடவுச்சொற்கள் அல்லது அணுகல் குறியீடுகளை சட்டவிரோதமாக வெளியிடுதல், பண ஆதாயத்திற்காக மோசடியாகப் பதிவுசெய்யப்பட்ட போஸ்ட்-பெய்டு சிம் அட்டைகளைத் தெரிந்தே வழங்குதல் உள்ளிட்டவை அவர்கள் புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்களில் அடங்கும்.
இந்த 24 நபர்களும் தங்களது வங்கிச் கணக்குகளைக் குற்றக் கும்பல்களிடம் ஒப்படைத்தது அல்லது விற்றதன் மூலம் மோசடிகளுக்குத் துணைபோனதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தைப் பெறுவது, மாற்றுவது அல்லது பணத்தைச் சேகரிப்பது போன்ற செயல்கள் மூலம் குற்றக் கும்பல்கள் கறுப்புப் பணத்தை வெள்ளை பணமாக்க இவர்கள் வழிவகை செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிலர் வங்கிகளை ஏமாற்றி கணக்குகளைத் தொடங்கி, பின்னர் அவற்றின் இணைய வங்கிச் சான்றுகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஒருவர் தமது சிங்பாஸ் விவரங்களைச் சட்டவிரோதமாகப் பகிர்ந்ததன் மூலம், குற்றக் கும்பல்கள் தமது அடையாளத்தைப் பயன்படுத்தி வங்கிச் கணக்குகளைத் தொடங்க அனுமதித்தார்.
மற்றொருவர், பணத்திற்காகக் குற்றக் கும்பல்களின் பெயரில் சிம் அட்டைகளைப் பதிவுசெய்தார்.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த நபர்களுக்கு அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை தண்டனை விதிக்கப்படலாம்.

