ரயில் கட்டமைப்பின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை ஜனவரியில் கூடியது

ரயில் கட்டமைப்பின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை ஜனவரியில் கூடியது

2 mins read
450a69a8-c480-4167-b973-3c3d2a126fda
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்கும் டௌன்டவுன் ரயில் வழித்தடம்தான் நம்பகத்தன்மை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) கட்டமைப்பின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை, டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் கூடியுள்ளது.

நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) இதனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அதில் விதிவிலக்காக வட்ட ரயில் பாதை அமைந்தது. ஜனவரி 13ஆம் தேதி மாலையில் அந்தப் பாதையின் பீஷான் நிலையத்துக்கும் போன விஸ்தா நிலையத்துக்கும் இடையில் உள்ள ஏழு நிலையங்களில் பயணிகள் தாமதத்தைச் சந்தித்தனர்.

ரயில் பாதையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் காரணமாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் அந்தத் தாமதம் நீடித்தது.

மேலும், அந்தச் சம்பவம் சிங்கப்பூரின் ஐந்து வழித்தடங்களில் இயங்கும் ஒட்டுமொத்த எம்ஆர்டி ரயில்கள் குறித்த நேரத்திற்கு வந்து செல்லும் கச்சிதப் போக்கில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியது.

2025 பிப்ரவரிக்கும் 2026 ஜனவரிக்கும் இடைப்பட்ட ஓராண்டில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்ட சம்பவங்களிடையே 1.673 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் என்னும் சராசரிக் கணக்குப் பதிவானது.

அது, 2025 ஜனவரிக்கும் 2025 டிசம்பருக்கும் இடையில் பதிவான 1.606 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் என்னும் சராசரிக் கணக்கைக் காட்டிலும் சற்று அதிகம்.

சேவைத் தடைக்கு இடையிலான சராசரி கிலோமீட்டர் (எம்கேபிஎஃப்) மூலம் இது அளவிடப்படுகிறது. அந்த வகையில் முழு எம்ஆர்டி கட்டமைப்புக்குமான அளவீடு ஒரு மில்லியன் ரயில்-கி.மீ.

ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாமதத்தைச் சந்திப்பதற்கு முன்பு ஒரு ரயில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறது என்பதைப் பிரதிபலிக்கும் எம்கேபிஎஃப், ரயில் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொறியியல் அளவீடாகும்.

அந்த வகையில், ஐந்து வழித்தடங்களில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்கும் டௌன்டவுன் ரயில் வழித்தடம்தான் (DTL) நம்பகத்தன்மை மிகுந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த வழித்தட ரயில்கள் ஜனவரியில் 2.794 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் என்னும் கணக்கில் இயங்கின. அதற்கு முந்தைய மாதம் அது 2.787 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் என்று பதிவாகி இருந்தது. குறைவான கணக்கீடு குறைவான நம்பகத்தன்மையை உணர்த்தும்.

அதிக நம்பகத்தன்மையில் இரண்டாவது இடத்தையும் எஸ்பிஎஸ் டிரான்சிட் இயக்கும் ரயில்தடம்தான் பிடித்தது. அதன் வடக்கு கிழக்கு (NEL) வழித்தடம் டிசம்பர் மாதம் 2.198 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் என்று பதிவான நிலையில், ஜனவரியில் 2.209 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் என ஏற்றம் கண்டது.

ஒட்டுமொத்த நம்பகத்தன்மை அளவீட்டின் முடிவுகளில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் இயக்கும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் (TEL) வழித்தடம் இடம்பெறவில்லை. குறைவான பயணிகள் எண்ணிக்கை, வழக்கமான இடைவெளியில் ரயில்கள் இயங்காதது போன்ற காரணங்களால் அந்த வழித்தட ரயில்கள் குறைவான தூரத்திற்கு ஓடின.

அதன் ஐந்தாம் மற்றும் ஆறாம் கட்டத்தில் இடம்பெற்றுள்ள பிடோக் சவுத், சுங்கை பிடோக் நிலையங்கள் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் திறக்கப்பட உள்ளன.

அவை திறக்கப்பட்டு, அந்த ரயில் தடம் முழுமையாக இயங்கிய பின்னர் அதன் செயல்பாடு நிலைப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்