நியூயார்க்: 2025 பொதுத் தேர்தலில் வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் பலரும் வாக்களித்துள்ளனர். துபாயிலும் லண்டனிலும் வசிப்பவர்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள மூன்று வாக்களிப்பு நிலையங்களில் சிங்கப்பூரர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தத் தொடங்கினர்.
துபாய், லண்டன், வாஷிங்டன், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகர்களில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்களில் வெள்ளிக்கிழமை (மே 2) உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது.
பெய்ஜிங், கேன்பரா, ஹாங்காங், ஷங்காய், தோக்கியோவில் உள்ள இதர ஐந்து வாக்களிப்பு நிலையங்கள் சனிக்கிழமை (மே 3) உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு செயல்படத் தொடங்கின.
இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெறும் 2.75 மில்லியன் வாக்காளர்களில் 18,389 பேர் வெளிநாடுகளில் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். அவர்களில் 8,630 பேர் நேரடியாகவும் எஞ்சியவர்கள் அஞ்சல் மூலமாகவும் வாக்களிக்கின்றனர்.
“அமெரிக்காவில் உள்ள மூன்று வாக்களிப்பு நிலையங்களிலும் 1,743 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்துவர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று தேர்தல் துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2020 பொதுத் தேர்தலில் 4,794 வெளிநாடுவாழ் வாக்காளர்கள் வெளிநாட்டு வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தனர். பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வாக்காளர்களில் இது 72.97 விழுக்காடாகும்.
வெளிநாடுவாழ் வாக்காளர்கள் நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ செலுத்திய வாக்குச்சீட்டுகள், வாக்களிப்பு தினத்துக்குப் பிறகு 10 நாள்களுக்குள் சிங்கப்பூர் வந்துசேர வேண்டும்.