மேற்கத்திய உணவுகளைப் பரிமாறும் ‘பிராஸ்டர்ன்’ உணவக உரிமையாளர்களின் புகைப்படங்கள் நியூயார்க்கில் இருக்கும் 'டைம்ஸ்' சதுக்கத்தில் உள்ள விளம்பரப் பலகையில் இடம்பெற்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தன.
இந்த உணவகம் ஹவ்காங்கில் இருக்கும் சி யுவான் உணவங்காடி நிலையத்தில் அமைந்துள்ளது.
31 வயது ரெய்மி, 30 வயது ரோய்மி, 28 வயது ரெய்னி டான் மூவரும் அதன் உரிமையாளர்கள். நவம்பர் 20ஆம் தேதி, நாஸ்டாக் சந்தைக் கோபுரத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் எல்இடி திரையில் தங்கள் புகைப்படங்களைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் உணவு விநியோக நிறுவனமான ‘கிராப்பின்’ விளம்பரக் காட்சிகளின் ஒரு பகுதியாக 53 தென்கிழக்கு ஆசிய உணவு வர்த்தகர்களின் புகைப்படங்களும் அவர்களின் உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளும் 37மீ உயரமுள்ள எல்இடி திரையில் இடம்பெற்றன.
‘பிராஸ்டர்ன்’ உணவக உரிமையாளர்களும் அவர்களில் அடங்குவர்.
இந்த விளம்பரக் காட்சிகள் நவம்பர் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அந்த எல்இடி திரையில் வலம்வந்தன.
தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திலுள்ள உணவு விநியோக ஓட்டுநர்கள், விநியோகப் பங்காளிகள், வர்த்தகக் கூட்டாளிகள் ஆகியோரை அங்கீகரித்து அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவர்களின் புகைப்படங்கள் ‘டைம்ஸ்’ சதுக்கத்தில் உள்ள விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டதாக ‘கிராப்’ நிறுவனம் தெரிவித்தது.
அதே நேரத்தில், உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் தென் கிழக்கு ஆசிய வட்டாரத்தில் இருக்கும்போது, ‘கிராப்’ செயலியின் மூலம் பெறக்கூடிய உணவுத் தெரிவுகளின் பன்முகத்தன்மையை வலுப்படுத்துவதற்காகவும் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டதாக அது கூறியது.


