தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்தைக் கூடு மீது ஆயிரம் கண்கள்; தூர நின்று ரசிக்க மக்களுக்கு அறிவுறுத்து

1 mins read
a4fef738-be6d-4987-8c1f-ed122241983b
தெலுக் பிளாங்கா ரைசில் மரத்தின் துவாரத்தில் காணப்படும் ஆந்தைக் குஞ்சுகள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ஆந்தைகள் கொண்ட கூடு ஒன்றின் அருகே கூட்டம் அதிகப்படியாகக் கூடிய நிலையில், அந்த அழகுமிகு பிராணிகளின் நலன் குறித்துச் சிலர் அக்கறைக் குரல் எழுப்பினர்.

இதை அடுத்து அவ்விடத்தில் தேசிய பூங்காக் கழகம் தடுப்புகள் போட்டுள்ளது.

சிங்கப்பூருக்கே உரிய இந்த ஆந்தைவகை, இயற்கையாக உருவான மரத்தின் ஓட்டைகளிலும் துவாரங்களிலும் கூடு கட்டும் இயல்புடையது.

தெலுக் பிளாங்கா ரைசில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றின் அருகே இந்த ஆந்தைக் கூடு அமைந்துள்ளது. இதனால், கூட்டை வழிப்போக்கர்கள் எளிதாகக் கண்டுகொண்டனர்.

ஆந்தைக்குஞ்சுகளைக் காட்டும் அதிகப்படியான புகைப்படப் பதிவுகள், ‘சிங்கப்பூர் வைல்டுலைஃப் சைட்டிங்ஸ்’ ஃபேஸ்புக் குழுவின் கவனத்திற்கு மே 6ஆம் தேதி வாக்கில் வரத் தொடங்கியது.

ஆனால், அந்தப் பதிவுகளில் கூடு இருக்கும் இடத்தின் விவரங்களும் இடம்பெற்றிருந்தன.

இதனால், ஆந்தைக்கூட்டை ரசிப்பதற்காகவும் ஆந்தைக்குஞ்சுகளின் தரிசனத்தைப் பெறுவதற்காகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவ்விடத்திற்கு வரத் தொடங்கினர்.

இதையடுத்து, சிங்கப்பூரின் காட்டு ஆந்தைகளின் அருகே போக வேண்டாம் என்று ஏக்கர்ஸ் அமைப்பு மே 7ஆம் தேதி அறிவுறுத்தியது.

தேசிய பூங்காக் கழகம் மே 9ஆம் தேதி மரத்தின் அருகே தடுப்புகள் இட்டதுடன் பாதுகாப்பான இடைவெளி விட்டு நிற்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

பெரிய கும்பலாக அந்த இடத்திற்குச் செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அது கோரியிருந்தது.

கூட்டத்திலிருந்து வரக்கூடிய சத்தம், ஆந்தைகளுக்குத் தேவையில்லாத அழுத்தத்தைத் தரலாம் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்