‘பொலைட்’ எனப் பொருள்படும் ‘கண்ணியமான’ காரின் உரிமையாளருக்குக் காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவரது காரில் ஒட்டப்பட்டிருந்த ‘பொலைட் கார்’ எனும் ஒட்டுவில்லையைத் தூரத்திலிருந்து பார்த்தால் காவல்துறை வாகனம் போல காட்சியளிக்கும்.
இந்த கார் பற்றி காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டவுடன், காரின் உரிமையாளரான கோ யோங் வெய், அந்த ஒட்டுவில்லையின் பெரும்பகுதியை அகற்றிவிட்டார்.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் ஆலோசனையின்படி, காவல்துறை அந்த 32 வயது கார் உரிமையாளருக்கு ஜூலை 2ஆம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது.
காவல்துறை சட்டம் 2004ன்படி, காவல்துறை தொடர்புடைய சீருடை, சின்னம், ஒட்டுவில்லை ஆகியவற்றை காவல்துறை அதிகாரி அல்லாதவர் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அவரை காவல்துறையைச் சேர்ந்தவர் என்று பொதுமக்கள் தவறாகக் கருதிவிடுவர் என்று அதன் விளக்கம் கூறுகிறது.
அச்செயலைப் புரிந்தவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறை, $2,500 அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு கோ, “இதுபோன்ற ஒட்டுவில்லையைப் பொருத்துவதால், காவல்துறை வாகனம் எனக் கருதி மற்றவர்கள் தங்கள் வாகனத்தின் வேகத்தைக் குறைத்துவிடுவார்கள். அதனால் விபத்துகள் நிகழாமல் தடுக்கலாம்,” என்று கூறியிருந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில், தான் மோட்டார் சைக்கிள், கார் சம்பந்தப்பட்ட பத்து விபத்துகளில் சிக்கியிருந்ததால், மற்றொரு விபத்தைத் தவிர்க்க இந்த ஒட்டுவில்லையைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.