சிங்கப்பூரின் மின்சார உற்பத்தி நிறுவனமான பசிபிக்லைட் பவர், எரிவாயு ஆற்றல்கொண்ட எரிசக்தி உற்பத்தி ஆலையின் கட்டுமானப் பணிகளைத் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) தொடங்கியுள்ளது.
ஜூரோங் தீவில் கட்டப்படும் அது, மின்கலன் சேகரிப்புக் கட்டமைப்பைக் கொண்ட சிங்கப்பூரின் முதல் ஆலையாகும்.
மின்கலன் சேகரிப்புக் கட்டமைப்புகள் வழக்கமாக சூரிய சக்தி ஆலை போன்ற இயற்கை எரிசக்திக் கட்டமைப்புகளுடன் இணைக்கப்படுகின்றன.
சூரிய சக்தி, காற்றாலை போன்ற இயற்கை எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் அதிக ஆற்றலைச் சேகரித்துவைக்க உதவும் மின்கலன்கள் தேவை ஏற்படும்போது மின்சாரக் கட்டமைப்புகளுக்குள் அவற்றைத் திரும்ப விநியோகம் செய்யலாம்.
புதிய ஆலையில் மின்கலன் சேகரிப்புக் கட்டமைப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் மின்சார விநியோகத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்காத விதத்தில் பெரிய எரிவாயு இயந்திரத்தைப் பொருத்த முடியும் என்று பசிபிக்லைட் பவர் தெரிவித்தது.
சிங்கப்பூருக்குத் தற்போது 20க்கும் மேற்பட்ட எரிவாயு ஆற்றல் கொண்ட எரிசக்தி ஆலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
பசிபிக்லைட் நிறுவனத்தின் ஆலை 2029ல் செயல்படத் தொடங்கும்போது, ஒற்றை மின் உற்பத்தி ஆலையைக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய ஆலையாக இருக்கும்.
ஒருங்கிணைந்த சுழற்சி எரிவாயு இயந்திரம் கொண்ட 670 மெகாவாட் ஆலை, 1.2 மில்லியன் நான்கறை வீட்டுக்கான ஓராண்டு மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும்.
ஏறக்குறைய $1.2 பில்லியன் செலவில் கட்டப்படும் மின்சார ஆலை, சிங்கப்பூரின் ஆகப் பெரிய, ஆக ஆற்றல் வாய்ந்த ஒருங்கிணைந்த சுழற்சி எரிவாயு இயந்திரம் கொண்ட நிறுவனமாக இருக்கும்.
மிட்சுபிஷி பவர், ஜூரோங் எஞ்சினியரிங் ஆகிய நிறுவனங்கள் புதிய ஆலையைக் கட்டுகின்றன.
புதிய ஆலை, பசிபிக்பவர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி உச்சவரம்பை 70 விழுக்காட்டாக அதிகரிக்கும் என்று வர்த்தக, தொழில் (எரிசக்தி, தொழில்) அமைச்சு டான் சீ லெங் தெரிவித்தார்.
ஆலையின் நில அகழ்வு நிகழ்ச்சியில் அமைச்சர் டான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பசிபிக் பவர் நிறுவனம், சிங்கப்பூரின் வருடாந்தர மின்சாரத் தேவையில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டைப் பூர்த்திசெய்கிறது.
சிங்கப்பூரின் உச்சகட்ட மின்சாரத் தேவை கடந்த ஆண்டு எட்டு கிகாவாட்டாக இருந்தது. உச்சக்கட்ட மின்சாரத் தேவை என்பது குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஆக அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு.
