சிங்கப்பூரில் ஆற்றலை அதிகரிப்பதற்கான மாத்திரைகளை உட்கொண்ட ஒன்பது பேரின் தோலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
அவர்களில் சிலரின் தோலில் கொப்புளங்கள் வந்தன. சிலருக்கு உடல் முழுவதும் தோல் உரிந்தது.
சுகாதார அறிவியல் ஆணையம் (மார்ச் 10) மொடஃபினில், அர்மொடஃபினில் ஆகிய ஊக்கமருந்துகள் உள்ள பொருள்களை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
கடந்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி வரை அத்தகைய ஊக்க மாத்திரைகளை உட்கொண்ட் ஏழு ஆடவர்களும் இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் 18லிருந்து 57 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மொடஃபினில், அர்மொடஃபினில் ஆகியவை சிங்கப்பூரில் பதிவுசெய்யப்படாத ஊக்க மருந்துகள்.
இருப்பினும், நார்க்கோலெப்ஸி என்ற ஒருவகை தூக்க மயக்க நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சில நாடுகளில் மொடஃபினில், அர்மொடஃபினில் மாத்திரைகள் கொடுக்கப்படுவதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் சொன்னது.
சிங்கப்பூரில் அந்த மாத்திரைகளை உட்கொண்டோர் மருத்துவரின் ஆலோசனையின்றி அவ்வாறு செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் கேலாங்கிலிருந்தும் தங்கள் நண்பர்களிடமிருந்தும் மாத்திரைகளைப் பெற்றதாக நம்பப்படுகிறது.
ஆற்றலை அதிகரித்து விழிப்புடன் இருப்பதற்காக சிலர் மாத்திரைகளை உட்கொண்டதாகத் தெரிவித்தனர்.
அவர்களில் அறுவர் ஸ்டீவன்ஸ்-ஜான்சன் எனும் தோல் நோய்க்கு ஆளாகினர்.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் அனுமதியின்றி மொடஃபினில், அர்மொடஃபினில் ஆகிய மாத்திரைகள் விற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி வரை அபராதம், ஈராண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.