மூன்று பேரை கிட்டத்தட்ட $263,000 அளவுக்கு ஏமாற்றிய சம்பவங்களில் மர்ம நபர்களுடன் இணைந்து செயல்பட்ட இருவர் கடுமையான எச்சரிக்கைகளுடன் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த பெண்மணி வாங் ருயி, 34, மலேசிய ஆடவர் சாவ் யங் செங், 38, ஆகியோர் அந்த இருவர்.
நீதிபதி பிரென்டா டான் இம்மாதம் 17ஆம் தேதி அந்த விடுவிப்பு ஆணையைப் பிறப்பித்தார்.
அதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாக்களுக்கு தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) பதிலளித்துள்ளது.
வழக்கு தொடர்பான உண்மைகளையும் சூழல்களையும் கவனத்துடன் பரிசீலித்த பின்னர் வாங் மற்றும் சாவ்க்கு சிறைத் தண்டனைக்குப் பதில் கடுமையான எச்சரிக்கை விடுக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததாக அந்த அலுவலகம் கூறியுள்ளது.
இருவர் மீதும் 2024 நவம்பர் 15ஆம் தேதி மூன்று மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இணையம் வாயிலான வேலைவாய்ப்புப் பற்றி வாட்ஸ்அப்பில் வெளியான தகவலை நம்ப வைத்து மோசடி நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனை நம்பிய ஒருவர் $28,000 பணம் அனுப்பி ஏமாந்தார். அந்தப் பணம் ஏழு பேரின் வங்கிக் கணக்கிற்கு வெவ்வேறு தொகையில் அனுப்பப்பட்டது.
முதலீட்டு வாய்ப்பு இருப்பதாகக் கூறியும் மோசடி அரங்கேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2024 நவம்பர் மாதம் மோசடிக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.