கூட்டுரிமை வீடு ஒன்றை வாங்குவதற்காகச் சீனாவைச் சேர்ந்த தந்தையும் மகளும் கிட்டத்தட்ட $1.2 மில்லியன் செலுத்தினர்.
அவர்களது சொத்து முகவர் வேறு சில நிதிகளில் கையாடல் செய்திருந்ததையடுத்து அவர்கள் அந்தக் கூட்டுரிமை வீடு வாங்குவதற்காகச் சொத்து மேம்பாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இதனால் அவர்கள் வைப்புத்தொகையாகச் செலுத்திய $380,000ஐ இழக்க நேரிட்டது.
அந்த வீட்டை வாங்க விரும்பிய திருவாட்டி லி ஜியாலினும் அவரது தந்தை லி சுயினனும் தாங்கள் செலுத்திய தொகையைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியாக அந்தச் சொத்து மேம்பாட்டு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்தச் சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் பெயர் ‘விங்கிரோன் இன்வெஸ்ட்மென்ட்’.
அந்நிறுவனம் அவ்விருவரும் செலுத்திய $380,000ஐ வைத்திருக்க ஒப்பந்தப்படி உரிமையுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த ஜோடிக்கு கிட்டத்தட்ட $490,000ஐ திரும்ப அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது.
வைப்புக்தொகையான $380,000ஐ அந்நிறுவனம் ஒப்பந்தப்படி திரும்பத் தரவேண்டிய அவசியமில்லை எனவும் வழக்கு நிலுவையில் உள்ளதால் எஞ்சியுள்ள கிட்டத்தட்ட $326,000 தொகையை அந்நிறுவனம் தற்போது செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.

