உலகின் புதிய வானளாவிய கட்டடங்களில் ‘பான் பசிபிக் ஆர்ச்சர்ட்’ சிறந்ததாகத் தேர்வு

உலகின் புதிய வானளாவிய கட்டடங்களில் ‘பான் பசிபிக் ஆர்ச்சர்ட்’ சிறந்ததாகத் தேர்வு

படம்: பான் பசிபிக் ஆர்ச்சர்ட்

06 Oct 2024 - 6:39 pm

2 mins read

புதிய வானளாவிய கட்டடங்களில் சிங்கப்பூரின் பான் பசிபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டல் உலகளவில் மிகச் சிறந்தது என்ற பெருமையைப் பெற்று உள்ளது.

23 மாடிகளைக் கொண்ட அந்த ஹோட்டல் சிங்கப்பூரின் முக்கியத்துவமிக்க கடைத்தொகுதி வட்டாரத்தில் அமைந்துள்ளது.

2023 ஜூன் மாதம் திறக்கப்பட்ட அந்த 140 மீட்டர் உயர ஹோட்டல், மேலும் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

100 மீட்டருக்கும் 199 மீட்டருக்கும் இடைப்பட்ட உயரத்தில் அமைந்த கட்டடங்களில் ஆகச் சிறந்தது என்று விருதும் அவற்றில் ஒன்று.

செப்டம்பர் 23 முதல் 27 வரை லண்டனிலும் பாரிசிலும் நடைபெற்ற மாநாட்டில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

வானுயர் கட்டடங்கள், நகர்ப்புற வாழ்விடங்கள் ஆகியவற்றுக்கான மன்றம் (CTBUH) என்னும் லாபநோக்கமற்ற அமெரிக்க அமைப்பு, உலகம் முழுவதும் உள்ள உயரமான, முன்னணிக் கட்டடங்களை ஆராய்ந்து, தேர்ந்து எடுத்து வருகிறது.

பான் பசிபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டலை புதிய வானளாவிய கட்டடங்களில் சிறந்தது என்று தேர்ந்து எடுத்துள்ள அந்த அமைப்பு, “சிங்கப்பூரின் மரபுடைமைக்கு மதிப்பளித்து, தனது வடிவமைப்பில் பசுமையை முழுமையாக ஒருங்கிணைத்து உள்ளது,” என்று தெரிவித்து உள்ளது.

எரிசக்தி மற்றும் தண்ணீர்ப் பயன்பாடு, கழிவுகள் ஆகியவற்றைக் குறைப்பதில் அந்த ஹோட்டல் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டு உள்ளது.

வனம், கடற்கரை, பூங்கா, வான்மேகம் என்னும் சிங்கப்பூரின் நான்கு சுற்றுச்சூழல்களை தமது வடிவமைப்பில் பான் பசிபிக் ஆர்ச்சர்ட் இணைத்துள்ளது.

சிங்கப்பூரின் வோஹா கட்டடக்கலை (Woha Architects) நிறுவனம் வடிவமைத்துள்ள அந்த ஹோட்டலில் 350 அறைகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்