நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (எல்டிஏ) புதிய தலைவராக, ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர் பாங் கின் கியோங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) பொறுப்பேற்கவுள்ளார்.
அவர், தற்போதைய தலைவர் ஏலன் சான் ஹெங் லூனிடமிருந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
பாங்கும் 15 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் மூவாண்டு காலத்துக்குப் பொறுப்பு வகிப்பர். அவர்களின் தவணைக் காலம் 2029ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிறைவடையும். போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் அவர்களை நியமித்தார்.
பொறியியல், நகரக் கட்டமைப்புத் திட்டமிடல், நிதி, சட்டம், ஊழியர்த் தொடர்புகள் உள்ளிட்ட அம்சங்களில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பொறுப்புகளுடன் சம்பந்தப்பட்ட அனுபவமும் திறன்களும் இருப்பவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிட்டது.
60 வயது பாங்குக்கு 35 ஆண்டுகாலம் அரசாங்கத் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. 2012ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை போக்குவரத்து அமைச்சின் நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றியதும் அதில் அடங்கும்.
பிறகு 2017 செப்டம்பர் மாதத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி ஓய்வுபெறும் வரை அவர் உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றினார்.


