உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளரான 59 வயது திரு பாங் கின் கியோங், வரும் ஜூன் 1ஆம் தேதி பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
1993ஆம் ஆண்டு , பொதுச் சேவையில் இணைந்த திரு பாங், அப்போதைய பிரதமர் கோ சோக் டோங்கின் முதன்மை செயலாளர், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர், மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
அவர் 2010ஆம் ஆண்டில் சட்ட அமைச்சின் நிரந்தரச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், 2017ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சில் பொறுப்பேற்பதற்கு முன்பு, 2012ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து அமைச்சிலும் பணியாற்றியுள்ளார்.
உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளராக, கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். கிருமித்தொற்றை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு வழிகாட்டிய ‘ஹோம்ஃபிரண்ட் கிரைசிஸ் எக்ஸிகியூட்டிவ் குரூப்’ குழுவுக்கும் அவர் தலைமை தாங்கினார் என்று அவரது ஓய்வை அறிவிக்கும் அறிக்கையில் பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரைப் பாதுகாப்பான மற்றும் நல்லிணக்கமிக்க நாடாக மாற்றுவதற்காக, உள்துறை அமைச்சில் மற்ற அமைப்புகள் மற்றும் சமூகத்துடன் இணைந்து அவர் பணியாற்றியதற்கும் குறிப்பாக ‘ஹோம்ஃபிரண்ட் கிரைசிஸ் எக்ஸிகியூட்டிவ் குரூப்’ தலைவராக அவர் ஏற்படுத்திய நீடித்த தாக்கத்திற்கும் பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான சான் சுன் சிங், திரு பாங்கிற்கு நன்றி தெரிவித்தார்.
“பொதுச் சேவைக்கும் சிங்கப்பூருக்கும் பல ஆண்டுகளாக கின் கியோங் வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கும் அவரது அர்ப்பணிப்புமிக்க சேவைக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று தற்காப்பு அமைச்சருமான திரு சான் கூறினார்.
உள்துறை அமைச்சில், வெளிநாட்டுக் குறுக்கீடு மற்றும் மோசடிகள் போன்ற புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் முயற்சிகளுக்கும் பல முக்கிய மற்றும் நுட்பமான நடவடிக்கைகளில் அமைச்சின் செயல்பாடுகளுக்கும் திரு பாங் தலைமை தாங்கினார் என்று பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

