தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடந்த தேர்தலைவிட அதிக வித்தியாசத்தில் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்டைக் கைப்பற்றியது மசெக

2 mins read
883c53d8-deda-4731-8690-e057bb0b86fa
தேர்தல் முடிவுகள் அறிவிப்பைத் தொடர்ந்து புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கில் மக்களைச் சந்தித்த வேட்பாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஐவர் அணி, 60.01 விழுக்காடு வாக்குகள் பெற்று வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் தொகுதியைக் கைப்பற்றியுள்ளது.

டாக்டர் ஹமீது ரசாக், கசெண்ட்ரா ஆகிய இரு புதுமுகங்களுடன் ஆங் வெய் நெங், ஷான் ஹுவாங் ஆகியோர் களம் கண்டனர்.

கடந்த தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியுடன் போட்டியிட்டு 51.68 விழுக்காடு வாக்குகள் பெற்று குறைந்த வித்தியாசத்தில் வென்ற நிலையில், இம்முறை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் மசெக வென்றுள்ளது.

இம்முறையும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி சார்பில் களமிறங்கிய டான் செங் போக், லியோங் மன் வாய், ஹேசல் புவா, சுமர்லெக்கி அம்ஜா, சானி இஸ்மாயில் ஆகியோர் கொண்ட அணியை எதிர்த்து 88,347 வாக்குகள் பெற்று மசெக வென்றுள்ளது.

வெற்றி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, கடந்த ஆண்டைவிட அதிக வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

“மக்கள், எங்கள் அணிக்குத் தந்துள்ள ஆதரவு நம்பிக்கையளிப்பதாக உள்ளது,” என்றார். தொடர்ந்து எதிர்க்கட்சியினர் வீட்டு விலைகுறித்து கேள்வி எழுப்பியதைப் பற்றிப் பேசிய அவர், “வீட்டு விலை தொடங்கி, வீடுகள் தொடர்பான சிரமங்கள் மக்களிடம் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்துள்ளோம். விரைவில் அதற்குரிய பணிகளைத் தொடங்குவோம்,” என்றார்.

தமிழில் பேசிய டாக்டர் ஹமீது ரசாக், “மக்கள் எங்களை நம்பி வாக்களித்துள்ளனர். பிரசாரக் கூட்டங்களிலும், மக்களிடமும் நான் குரல்கொடுக்கவுள்ளதாகக் கூறிய கொள்கைகளை அமல்படுத்துவதே முக்கியப் பணி,” என்றார்.

கடந்த முறைபோலவே இம்முறையும் கடும் போட்டி கொடுத்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும், டாக்டர் டான் செங் போக்குக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார் அமைச்சர் டெஸ்மண்ட் லீ.

தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர் லியோங் மன் வாய், “தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளித்துள்ளது. தோல்விகுறித்து ஆராய்ந்து, மக்களின் நம்பிக்கையை எவ்வாறு பெறுவது எனும் முறைகுறித்து மறுபரிசீலனை செய்வோம். அடுத்த போட்டிக்குத் தயாராவோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்