தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டவர்களால் சிங்கப்பூரில் நிலத்தின் விலை கூடியுள்ளது: சீ சூன் ஜுவான்

2 mins read
827c65fe-f674-41a3-9421-f786ecac8b8f
உட்லண்ட்ஸ் விளையாட்டரங்கில் கூடியிருந்தவர்கள் வேட்பாளர் அரிஃபின் ஷா பேச வந்தபோது ‘அச்சமில்லை’ என்று குரல் எழுப்பினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா அண்மையில் மசெக அமைச்சர்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்றார். ஆனால் மசெக அவ்வாறு நடந்துகொள்கிறதா என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (சிஜக) தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் கேள்வி எழுப்பினார்.

உட்லண்ட்ஸ் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) இடம்பெற்ற நடைபெற்ற சிஜகவின் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டாக்டர் சீ அவ்வாறு கூறினார்.

“பல வெளிநாட்டவர்களும் நிரந்தரவாசிகளும் சிங்கப்பூரில் விலை மிகுந்த பங்களாக்களை வாங்கியுள்ளனர். அவர்களால்தான் சிங்கப்பூரின் நில விலை அதிகமாக உள்ளது. சிங்கப்பூரர்கள் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் அடுக்குமாடி வீடுகள் வாங்க திணறுகின்றனர்,” என்று தெரிவித்தார் டாக்டர் சீ.

அவர் அவ்வாறு கூறியபோது மக்களிடம் அதிக ஆரவாரம் காணப்பட்டது.

“தேசிய சேவை புரியும்போது சிங்கப்பூருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் நாம் சிங்கப்பூரை யாருக்காகப் பாதுகாக்கிறோம் என்று நினைத்தால், பெரிய பங்களாக்களில் வாழும் பணக்காரர்களுக்காகவா நாம் சண்டை போடுகிறோம் என்று யோசிக்கத் தோன்றுகிறது,” என்று சொன்னார் டாக்டர் சீ.

சிங்கப்பூரர்கள் செழிக்காமல், பிழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொன்னார் டாக்டர் சீ.

சிஜக சார்பில் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்களில் ஒருவரான அரிஃபின் ஷா, சிங்கப்பூரின் முதுகெலும்பு அரசாங்க ஊழியர்கள் என்றும் அமைச்சர்கள் அல்லர் என்றும் கூறினார்.

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சிங்கப்பூர் நன்கு செயல்படுவதற்குக் காரணமே நம் அரசாங்க ஊழியர்கள்தான். எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் அவர்கள் மக்களின் தேவைகளுக்கு முழுநேரம் குரல் தருவார்கள். மசெக அமைச்சர்கள் அரசாங்கப் பணியை வெறும் பகுதி நேரமாகத்தான் பார்க்கிறார்கள்,” என்றார் அரிஃபின்.

முன்னர் பேசிய பிரசாரக் கூட்டத்தில் கூடியிருந்த மக்களுக்கு ‘அச்சமில்லை’ என்ற வார்த்தையை உச்சரிக்கக் கற்றுத்தந்திருந்தார் அரிஃபின்.

திங்கட்கிழமை பிரசாரத்தைக் காண வந்திருந்த மக்கள் அரிஃபின் பேசியபோது பலமாகக் கைதட்டி ‘அச்சமில்லை’ என்று உரக்கக் குரல் எழுப்பினர்.

சிங்கப்பூரின் தற்போதைய நிலை பணக்காரர்கள் செழிக்கும் வகையில் உள்ளதாக சொன்ன அரிஃபின், வரும் பொதுத் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

“உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் உங்களுக்காக நாடாளுமன்றத்தில் எத்தனை முறை கேள்வி கேட்டு, குரல் தந்துள்ளனர் என்று நீங்கள் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம். சிஜக வெற்றி பெற்றால் உங்களுக்காக நாங்கள் அன்றாடம் குரல் தருவோம்,” என்றார் அரிஃபின்.

சிஜகவின் கொள்கைகளுக்கான துணைத் தலைவர் ஜேம்ஸ் கோமஸ் பேசுகையில், சிங்கப்பூரர்களின் மனநலனுக்கு அதிக அக்கறை எடுக்கப்படவில்லை என்றார்.

“சிங்கப்பூரில் இருக்கும் 26 பலதுறை மருந்தகங்களில் வெறும் 22ல் மட்டுமே மனநலன் சேவைகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட தனியார் மருந்தகங்களில் மட்டும் அதிக மனநலன் சேவைகள் உள்ளன,” என்றார் ஜேம்ஸ் கோமஸ்.

குறிப்புச் சொற்கள்