செம்பவாங் குழுத்தொகுதியை வசப்படுத்திய மசெக

செம்பவாங் குழுத்தொகுதியை வசப்படுத்திய மசெக

1 mins read
6312cbab-5f58-4e97-af06-2fb73a214490
செம்பாவாங் குழுத்தொகுதியில் வெற்றிப்பெற்ற மக்கள் செயல் கட்சியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதன்முறையாக மும்முனைப் போட்டியை எதிர்கொண்ட செம்பாவாங் குழுத்தொகுதியை மக்கள் செயல் கட்சி வசப்படுத்தியுள்ளது. 67.75% வாக்குகளைப் பெற்று கட்சி அங்கு முன்னிலை வகித்தது.

ஐந்து உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், திரு விக்ரம் நாயர், திருவாட்டி மரியாம் ஜாஃபர், புதுமுகங்கள் திரு கேப்ரியல் லாம், திரு இங் ஸி ஷுவன் ஆகியோர் களமிறங்கினர்.

“இது வெறும் ஒன்பது நாள்கள் இடம்பெற்ற பிரசாரத்திலிருந்து உதித்த வெற்றி அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்தால் கிடைத்த வெற்றி,” என்றார் திரு ஒங்.

மக்கள் செயல் கட்சியுடன் மூன்றாவது முறையாக மோதிய தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி இந்த முறை 2.32% வாக்குகளைப் பெற்றது.

2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் செம்பாவாங் குழுத்தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கு 29.93% வாக்குகள் கிடைத்தன.

தேர்தல் களத்தில் கடுமையான போட்டியைத் தந்த எதிர்க்கட்சி அணிகளுக்கு திரு ஓங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி சார்பில் திரு ஸ்பென்சர் இங், திரு யட்ஸெத் ஹைரிஸ், திரு ரையன் சியா, திருவாட்டி வெரினா ஓங், திரு லீ வேய் ஆகியோர் களமிறங்கினர்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் திரு ஜேம்ஸ் கோமெஸ், திரு பிரையன் லிம், திரு அல்ஃபிரெட் டான், திரு டமான்ஹுரி அபாஸ், திருவாட்டி சுராயா அக்பர் ஆகியோர் போட்டியிட்டனர்.

குறிப்புச் சொற்கள்