வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் மக்கள் செயல் கட்சி வழக்கறிஞர் அலெக்ஸ் இயோவைப் பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் களமிறக்குகிறது.
அல்ஜுனிட் தொகுதியில் கடந்த 8எட்டு ஆண்டுகளாகச் சேவையாற்றிய திரு இயோ, மீண்டும் பொத்தோங் பாசிருக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவதைப்போல் இருப்பதாகச் செய்தியாளர்களிடம் (ஏப்ரல் 16) பகிர்ந்துகொண்டார்.
2013ஆம் ஆண்டு பொத்தோங் பாசிரில் திரு இயோவின் சேவை தொடங்கியது.
பொத்தோங் பாசிர் வட்டாரத்துக்கான எதிர்காலத் திட்டங்களை முன்வைத்திருப்பதாகக் கூறிய அவர், வட்டாரத்தைப் புதுப்பிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றார்.
“பொத்தோங் பாசிரில் சேவையாற்ற விரும்பும் அணி வட்டாரத்தில் கொட்டிக்கிடக்கும் கடந்தகால மரபுடைமையையும் எதிர்காலத்துக்கான கனவுகளையும் எப்படி ஒன்றிணைப்பது என்பதைப் புரிந்துவைத்திருக்கவேண்டும்,” என்று திரு இயோ குறிப்பிட்டார்.
46 வயது திரு இயோ 2020ஆம் ஆண்டு அரசியலுக்குள் கால்வைத்தார். அதே ஆண்டு அல்ஜுனிட் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சிக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள் செயல் கட்சி அணியில் திரு இயோவும் ஒருவர்.
பொத்தோங் பாசிர் தமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு வட்டாரம் என்ற திரு இயோ, மக்களின் கோரிக்கைகளைக் கவனத்துடன் கேட்டறிந்து வாக்குறுதியளித்த திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தப் போவதாகக் குறிப்பிட்டார்.
“இதற்குமுன் இங்கு வேரூன்றிய முன்னோடிகள் செய்த செயல்களை நான் எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. நம்பிக்கையுடன் மக்களுடனான உறவும் தானாக வரும் சொத்து அல்ல என்பதை நான் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறேன். எனக்கான மரியாதையையும் நம்பிக்கையையும் நானே சம்பாதித்துக்கொள்ளவேண்டும்” என்று திரு இயோ சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
தேவை ஏற்பட்டபோதெல்லாம் அவ்வப்போது பொத்தோங் பாசிருக்கு வந்துசென்றதைக் குறிப்பிட்ட திரு இயோ, அங்குள்ள குடியிருப்பாளர்கள் தமக்கு அந்நியர் அல்லர் என்றும் சொன்னார்.
1968ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொத்தோங் பாசிர் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை சிறிய தனித்தொகுதியாக இருந்தது. இப்போது அது இரண்டாம் ஆகப் பெரிய தனித்தொகுதியாக பெருகியுள்ளது.
“அதிகமான குடியிருப்பாளர்கள் என்றால் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும் என்று அர்த்தம்,” என்றார் திரு இயோ.
பிடாடாரி வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளனர். பொத்தோங் பாசிரில் இளம் குடும்பங்கள், மூத்தோர், மூன்று தலைமுறைகளைக் கொண்ட குடும்பங்கள் இருக்கின்றன. அத்தனை பேரின் தேவைகளையும் பூர்த்திசெய்வதில் தாமும் தமது அணியும் கவனம் செலுத்தும் என்றார் திரு இயோ.
பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் சிங்கப்பூர் மக்கள் கட்சியும் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

