சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (சிஜக) கொள்கைகளைப் பற்றி பொதுத் தேர்தலுக்கு முன்னர் குறைசொன்னாலும் தேர்தலுக்குப் பிறகு சிஜகவின் கொள்கைகளைத் தழுவிய திட்டங்களையே மக்கள் செயல் கட்சி (மசெக) செயல்படுத்துவதாக சிஜகவின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் கூறியுள்ளார்.
புதன்கிழமை (ஏப்ரல் 30) மாலை செம்பவாங்கில் உள்ள சன் பிளாசா கடைத்தொகுதிக்கு அருகில் இருக்கும் திடலில் செம்பவாங் குழுத்தொகுதிக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பிரசாரம் நடைபெற்றது.
அதில் பேசிய டாக்டர் சீ, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சிஜக முன்வைத்த திட்டம் இப்போது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் எனும் பெயரில் மசெக செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அதிகளவில் சம்பளம் பெறுபவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டுமென்ற பரிந்துரையை சிஜக முன்வைத்த போது அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சிஜக மிக நடுத்தர தரம் வாய்ந்த விரோதி எதிர்க்கட்சி என்று குறை கூறியதை தமது உரையில் சுட்டிய டாக்டர் சீ, பிறகு 2015ல் அதிக வருமானம் ஈட்டும் 5 விழுக்காட்டினர் கூடுதல் வரி கட்டவேண்டுமென்ற திட்டத்தை மசெக செயல்படுத்தியதாகச் சொன்னார்.
“ஒரு கட்சியின் வெற்றி அது எத்தனை பணக்காரர்களை கவர முடியும் என்பதல்ல. அந்தக் கட்சி எந்த அளவுக்கு மக்களின் கவலைகளைத் தீர்க்க முடியும் என்பதில்தான் உள்ளது,” என்று செம்பவாங் வெஸ்ட் தனித் தொகுதியின் சிஜக வேட்பாளருமான டாக்டர் சீ கூறினார்.
5.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான பின்லாந்தை தமது உரையில் உதாரணமாக குறிப்பிட்ட அவர், அங்கு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல சிங்கப்பூரர்களும் வாழ வழியமைக்கப்பட வேண்டும் என்றார்.
சிஜக எதிர்மறையான அரசியலில் ஈடுபடும் கட்சியன்று என்று புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியின் சிஜக வேட்பாளரான டாக்டர் பால் தம்பையா பிரசாரத்தில் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் முன்னர் 2011 பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தபோதும் அவர், பிறகு தேர்தல்களில் சிறப்பாக வெற்றி கண்டது போல, இம்முறை செம்பவாங்கில் தோல்வி கண்டாலும் அவர் பெரிதளவில் பாதிக்கப்பட மாட்டார் என்றார் டாக்டர் தம்பையா.
தொடர்புடைய செய்திகள்
“அரசாங்கம் அது செய்யும் செயல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அது பணக்காரர்களை மட்டும் திருப்திப்படுத்துவதில் குறியாக இருக்கக் கூடாது,” என்று டாக்டர் பால் தம்பையா மேலும் தெரிவித்தார்.
சிஜகவின் கொள்கைகளைப் பற்றி விளக்கிய டாக்டர் தம்பையா, மகப்பேறு, குழந்தை பராமரிப்பை இலவசமாக்குவது, தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை நீக்குவது, வீடுகள் வாங்க நீக்குப்போக்கான வழியமைப்பது போன்றவற்றை தமது உரையில் வலியுறுத்தினார்.
அண்மையில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மசெக அமைச்சர்களை இழக்கும் அபாயத்தை பற்றிப் பேசியதை தமது உரையில் குறிப்பிட்ட டாக்டர் தம்பையா, இது ஏதோ ஒருவர் மலையேறச் சென்று திரும்பி வரும் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் போவதுபோல் இருக்கிறது என்றார்.
பிரசாரக் கூட்டத்துக்கு வந்த தொழில்நுட்ப வல்லுநரான குணசீலன், 57, “நான் உட்லண்ட்ஸில் வசிக்கிறேன். எனக்கு பிரசாரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு கட்சியின் பிரசாரத்திற்கு வந்து நான் என்ன முடிவு எடுக்கலாம் என்று யோசிப்பேன்,” என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார்.