இந்தப் பொதுத் தேர்தலில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் சார்பில் இந்திய வேட்பாளர்கள் பலர் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
குறிப்பாக, கடந்த இரு பொதுத் தேர்தல்களோடு ஒப்பிடுகையில், ஆளும் மக்கள் செயல் கட்சி இந்தத் தேர்தலில்தான் அதிகமாக மூன்று இந்திய வேட்பாளர்களைப் புதிதாகக் களமிறக்கி உள்ளது.
2020 பொதுத் தேர்தல் மசெக பட்டியலில் புதிய இந்திய வேட்பாளர்கள் இடம்பெறவில்லை.
அதற்கு முன், 2015 தேர்தலில் இரு இந்திய வேட்பாளர்களை அக்கட்சி அறிமுகம் செய்தது. அவர்களில் ஒருவர் திரு முரளி பிள்ளை.
தற்போதைய தேர்தலில் திரு தினேஷ் வாசு தாஸ், 50, டாக்டர் ஹமீது ரசாக், 39, திரு ஜெகதீஸ்வரன் ராஜு, 38, ஆகியோர் மசெக வேட்பாளர்களாக அறிமுகம் கண்டுள்ளனர். குழுத் தொகுதிகளில் களம் காணும் அம்மூவரும் மருத்துவம், சுகாதாரம், சமூகம், தொழிற்சங்கம் ஆகிய துறைகளில் நிபுணத்துவ அனுபவம் பெற்றவர்கள். குறிப்பாக, மூவரும் தமிழில் பேசக்கூடியவர்கள்.
வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் டாக்டர் ஹமீது ரசாக்கும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் தினேஷ் வாசு தாஸும் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் ஜெகதீஸ்வரன் ராஜுவும் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் ஜெகதீஸ்வரன், பாட்டாளிக் கட்சியின் பிடியில் உள்ள அல்ஜுனிட் குழுத்தொகுதியில் களம் காண்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்னர், முரளி பிள்ளை இதே தொகுதியில்தான் அறிமுகம் ஆனார். அப்போது வெற்றிவாய்ப்பைப் பெறாவிட்டாலும் மறு ஆண்டே புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வாகைசூடினார் முரளி பிள்ளை.
அடுத்த தலைமுறை வேட்பாளர்களாக இளையவர்களை மசெக அடையாளம் கண்டு தேர்ந்து எடுத்துள்ளது. அந்த வகையில், அந்தக் கட்சி அறிமுகம் செய்த 32 வேட்பாளர்களில் அதிகபட்ச வயது 50. அந்த வயதுடைய வேட்பாளர் தினேஷ்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய அமைச்சரவையில் திரு கா. சண்முகம், 66, திரு விவியன் பாலகிருஷ்ணன், 64, குமாரி இந்திராணி ராஜா, 62, திரு ஜனில் புதுச்சேரி, 52, திரு முரளி பிள்ளை, 57, ஆகியோர் உள்ளனர். திரு ஜனில் மூத்த துணை அமைச்சராகவும் திரு முரளி பிள்ளை துணை அமைச்சராகவும் உள்ளனர்.
புதிய இந்திய வேட்பாளர்களில் யாரும் அமைச்சர் ஆவார்களா என்னும் ஊகத்திற்கு இங்கு இடமில்லை.