சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் மனநல ஆதரவை வழங்க மக்கள் செயல் கட்சி, புதிய மனநலக் குழுவை அக்டோபர் 5ஆம் தேதி சனிக்கிழமை அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
இக்குழு மூலம் கட்சித் தொண்டர்களும் சமூகப் பங்காளிகளும் இணைந்து, சிங்கப்பூரர்கள் மனநலச் சேவைகளை மேலும் எளிதில் அணுக வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்; மனநலச் சவால்களை எதிர்கொள்வோருக்கு உதவ சமூக ஆதரவும் வலுப்படுத்தப்படும்.
இம்முயற்சியின் முதற்கட்டமாக, குழுவுக்குத் துணைபுரியவுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட செயற்குழு, அக்டோபர் 5ஆம் தேதி மக்கள் செயல் கட்சி தலைமையகத்தில் பணியமர்த்தப்பட்டது.
இவ்வாண்டு பிப்ரவரியில் மனநல மேம்பாடு குறித்த நாடாளுமன்றக் கோரிக்கையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இச்செயற்குழுவில் அடங்குவர்.
தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, ஜாலான் புசார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால், வெஸ்ட் கோஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங் ஆகியோர் இப்புதிய மனநலக் குழுவுக்குத் தலைமைதாங்குவர்.
மனநலக் குழுவுக்கு அறிவியல், தொழிலனுபவ ரீதியாக ஆதரவளிக்கவுள்ள எட்டுப் பேர் அடங்கிய தொழில்சார் ஆலோசகர் குழுவும் இதே நிகழ்ச்சியில் பணியமர்த்தப்பட்டது. இக்குழுவில் மனநல நிபுணர்கள், மருத்துவமனைத் தலைமை நிர்வாகிகள், சமூக சேவை மற்றும் மனநல அமைப்புத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த கல்வி அமைச்சரும் மக்கள் செயல் கட்சி உதவிப் பொதுச் செயலாளருமான திரு சான் சுன் சிங், பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
“இந்த குழுவை அமைப்பது நாம் திடீரென எடுத்த முடிவல்ல. 2007ல் உருவாக்கிய முதல் தேசிய மனநல வரைபடத்திலிருந்து மக்கள் செயல் கட்சி அரசாங்கம் மனநல விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளது,” என்றார் அமைச்சர் சான்.
தொடர்புடைய செய்திகள்
“ஏன் இப்பொழுது இக்குழுவை அமைத்தோம்? மக்களைவிட தொழில்நுட்பம் விரிவாக வளரும் காலத்தில் இன்றைய தலைமுறையினர் புதிய சவால்களைச் சந்திக்கின்றனர். இவற்றைச் சமாளிக்க எவ்வாறு நம் மக்களைத் தயார்செய்ய முடியும் என நாம் சிந்திக்க வேண்டும்,” என அவர் கூறினார்.
இக்குழுவின்மூலம் மூன்று அம்சங்களை அடைய விரும்புவதாகக் கூறினார் அமைச்சர் சான்.
“முதலாவதாக, சிங்கப்பூரிலுள்ள அனைவரும் மனநலம் குறித்த சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு மனநலம் குறித்த நம் மனப்பான்மையை மாற்ற வேண்டும்.
“இரண்டாவதாக, மனநலப் பிரச்சினைகள் எதிர்நோக்குவோர், இப்பயணத்தில் தாம் தனியாக இருக்கின்றனர் என்றோ, உதவி நாடினால் தம் மீது பிறருக்குத் தவறான கருத்து ஏற்படக்கூடும் என்றோ எண்ணக்கூடாது.
“மூன்றாவதாக, நாம் மனநலப் பிரச்சினைகளால் வரும் விளைவுகளைச் சமாளிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், எதிர்காலத்தில் சந்திக்கக்கூடிய சவால்களுக்கு முன்கூட்டியே தனிநபர்களாகவும் ஒரு சமூகமாகவும் தயாராக வேண்டும்,” என்றார் அமைச்சர் சான்.
புதிய குழு முக்கியக் கொள்கை மாற்றங்களை முன்வைக்கும்
மனநலச் சேவைகளை நாடுவதற்குப் பெற்றோர் அனுமதியைப் பெறுவதற்கான வயது வரம்பு 18க்குக் குறைக்கப்பட வேண்டும் எனத் தாம் நாடாளுமன்றத்தில் பிப்ரவரியில் முன்வைத்தது போன்ற முக்கியக் கொள்கை மாற்றங்களை இந்த மனநலக் குழு ஏற்படுத்தும் என்றார் குழுவின் இணைத் தலைவர் ரேச்சல் ஓங்.
“இளையர் பலரும் மனநலப் பிரச்சினைகளைச் சந்தித்தாலும் தம் பெற்றோருக்குப் பயந்தோ, அவர்களுக்குப் பாரமாக இருக்கக்கூடாது எனக் கருதியோ மனநலச் சேவைகளை நாடத் தயங்குகின்றனர்,” என்றார் அவர்.
தற்போது சட்டப்படி பெற்றோர் அனுமதிக்கான வயது வரம்பு 21.
இளையருக்கு மனநலச் சேவை வழங்கும் நிபுணர்களுக்குக் கூடுதல் ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் இக்குழு முன்வைக்கும் கொள்கை மாற்றங்களில் அடங்கும் என அவர் கூறினார்.
இதையடுத்து, புதிய குழுவில் பங்காற்றவுள்ள சமூகப் பங்காளிகள் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவர்.

