இதுவரை இல்லாத வகையில் நான்கு முனைப் போட்டியை எதிர்கொண்ட தெம்பனிஸ் குழுத்தொகுதியை மக்கள் செயல் கட்சி (மசெக) வசப்படுத்தியது.
மக்கள் செயல் கட்சி 52.02% வாக்குகளையும் பாட்டாளிக் கட்சி 47.37% வாக்குகளையும் பெற்றன. மக்கள் சக்தி கட்சிக்கு 0.43% வாக்குகள் கிடைத்தன. தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சிக்கு 0.18% வாக்குகள் கிடைத்தன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையில் மனிதவள, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மூத்த துணையமைச்சர் டாக்டர் கோ போ கூன், போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், திரு டேவிட் நியோ, பேராசிரியர் செர்லின் சென் ஆகியோர் அடங்கிய அணி தெம்பனிஸில் போட்டியிட்டது.
1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தெம்பனிஸ் குழுத்தொகுதி 1997ஆம் ஆண்டைத் தவிர அனைத்துத் தேர்தல்களில் இருமுனைப் போட்டியை எதிர்கொண்டது. 1997ஆம் ஆண்டு போட்டியின்றி மசெக அந்தக் குழுத்தொகுதியைக் கைப்பற்றியது.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திரு மசகோஸ் தலைமையிலான மசெக அணி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டு 66.4% வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றது.
மக்களின் கவனத்தை இம்முறை அதிகம் ஈர்த்த குழுத்தொகுதிகளில் தெம்பனிஸும் ஒன்று. காரணம், பாட்டாளிக் கட்சி முதன்முறையாக அதன் அணியை அங்குக் களமிறக்கியது.
பாட்டாளிக் கட்சி அணி திரு ஃபைஷல் மனாப்பின் தலைமையில் வேட்புமனுத்தாக்கல் தினத்தன்று கடைசி நிமிடத்தில் தெம்பனிஸ் குழுத்தொகுதிக்கு மாற்றப்பட்டது.
மூன்று தேர்தல்களாகத் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, இந்த முறையும் அந்தக் குழுத்தொகுதியை விட்டுக்கொடுக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் முடிவுகளை அறிவித்த பிறகு தெம்பனிஸ் குழுத்தொகுதி வேட்பாளர்கள், பிடோக் விளையாட்டரங்கில் ஆதரவாளர்களையும் குடியிருப்பாளர்களையும் சந்தித்தனர்.
முதல்முறையாக இந்தப் பொதுத்தேர்தலில் வாக்களித்த தெம்பனிஸ் குடியிருப்பாளர் அவந்திகா, 23, தேர்தல் அனுபவம் முழுதும் மிகவும் சுவாரஸியமாக இருந்ததாகக் கூறினார்.
“கட்சிகளிடையே போட்டிகள் மிகவும் கடுமையாக இருந்ததால் கடைசி நிமிடம் வரை யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று கணிக்க முடியவில்லை. வெற்றிபெற்ற அனைத்து வேட்பாளர்களும் சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.