தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருவாட்டி ஜிஜீன் வோங்கின் இனரீதியான கருத்துக்கு மன்னிப்பு கேட்ட டாக்டர் சீ

3 mins read
643c26eb-80f3-4508-a996-20047f44cfba
மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதிக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜிஜீன் வோங் (இடம்), கட்சித் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

செம்பவாங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) இடம்பெற்ற சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திருவாட்டி ஜிஜீன் வோங் கூறிய இனரீதியான கருத்துக்காக ஒவ்வொரு சிங்கப்பூரரிடமும் இந்தியச் சமூகத்திடமும் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

“சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாகக் கண்டித்துவிடும். இந்தச் செயல் எங்கள் கட்சியின் நெறிகளுக்குப் புறம்பானது. நாங்கள் திருவாட்டி ஜிஜீனைக் கடுமையாகக் கண்டித்துள்ளோம். அவர் தாம் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்,” என்றார் டாக்டர் சீ.

முன்னதாக, சனிக்கிழமை எவர்கிரீன் தொடக்கப்பள்ளியில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களில் ஒருவரான திருவாட்டி ஜிஜீன் தமது சக வேட்பாளர் அரிஃபின் ‌‌‌ஷாவைப் பற்றி இனரீதியான கருத்தைக் கூறினார்.

“என் சக வேட்பாளர் அரிஃபின் குறித்து நான் கூறிய கருத்து தவறானது என்பதை உணர்கிறேன். அது இந்த அளவுக்கு விளைவுகளைக் கொண்டுவரும் என்று நான் உணரவில்லை. இனிமேல் நான் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன்,” என்று திருவாட்டி ஜிஜீன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பிரசாரக் கூட்டத்தில் கூடியிருந்தோர் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மிக நேர்மையானது என்று ஆரவாரத்துடன் உரக்கக் குரலெழுப்பினர்.

திரு அரிஃபினும் இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

“திருவாட்டி ஜிஜீன் அவரது தவற்றை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இத்தகைய இனரீதியான தாக்குதல் எனக்கு ஒன்றும் புதிதன்று. இதில் தீய நோக்கம் அடங்காமல் இருந்தாலும் இது முற்றிலும் தவறு. ஹொக்கியேன் மொழி பேசும் என் நண்பரிடம் திருவாட்டி ஜிஜீன் கூறியது உண்மைதானா என்று கேட்டேன். அவர் ஆம் என்று சொன்னபோது என் மனம் குமுறியது. சிங்கப்பூரில் இத்தகைய இனரீதியான தாக்குதலுக்கு முற்றிலும் இடமில்லை,” என்றார் அரிஃபின்.

சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் கொள்கைகள் பற்றிக் கலந்துரையாட சுகாதார அமைச்சர் ஓங் யி காங்குக்குத் தாம் விடுத்த அழைப்பை அமைச்சர் ஓங் கண்டுகொள்ளவில்லை என்று கூறிய டாக்டர் சீ, அமைச்சர் ஓங் சிங்கப்பூரர்கள் மனநலனுக்கு அதிகம் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

“எங்கள் கட்சி வெற்றி கண்டால் இளையர்களின் மனநலனில் அக்கறை கொள்ளும் விதமாகப் பல கலந்துரையாடல் அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்,” என்றார் டாக்டர் சீ.

மசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுநேர வேலையை வைத்துக்கொண்டு அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பைப் பகுதிநேர வேலையாக மட்டுமே பார்ப்பதாகத் தமது பிரசார உரையில் குறிப்பிட்ட டாக்டர் சீ, அவர்களைவிடத் தாமும் தமது கட்சி உறுப்பினர்களும் மக்களின் கவலைகளைச் சிறப்பான முறையில் கையாள முடியும் என்றார்.

“இந்த ஐந்து ஆண்டுகளில் திருவாட்டி போ லி சான் உங்களுக்கு நாடாளுமன்றத்தில் என்ன பெரிதாகக் குரல் தந்தார்? விலைவாசி ஏறியபோது அவர் அதை விவாதித்தாரா? நகர மன்றக் கட்டணம் அதிகரித்தபோது அவர் அதை மறுத்தாரா?” என்று டாக்டர் சீ கேள்வி எழுப்பினார்.

அண்மையில் பிரதமர் வோங் பொருள், சேவை வரியைப் பற்றிப் பேசிய கருத்து தமக்கு வியப்பளிப்பதாகச் சொன்னார் பிரசாரத்தில் பேசிய டாக்டர் பால் தம்பையா.

“பிரதமர் வோங் சிங்கப்பூரில் இருக்கும் பணக்காரர்களும், சுற்றுப்பயணிகளும் 9 விழுக்காடு பொருள், சேவை வரி கட்டுவதாகவும், சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுசீட்டுகளின் உதவியால் குறைந்த வருமானக் குடும்பங்கள் 7 விழுக்காடு பொருள், சேவை வரியைக் கட்டுவதாகவும் சொன்னார். ஏன் இதை இவ்வளவு சிக்கலாக்க வேண்டும்? சிங்கப்பூரர்கள் அனைவருமே 7 விழுக்காடு பொருள், சேவை வரி கட்டும்படி செய்யலாமே,” என்றார் டாக்டர் பால்.

குடியேற்றத்தைப் பற்றிப் பேசிய அவர், அமரர் லீ குவான் யூவின் ஆசைகளை மசெக நிராகரித்ததாகச் சொன்னார்.

“பல ஆண்டுகளுக்கு முன்னர் அமரர் லீ குவான் யூ சிங்கப்பூரில் அதிகமான பசுமை நிறைந்த இடங்கள் இருக்க வேண்டுமென்றும், சிங்கப்பூரில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாகவும் சொன்னார். ஆனால் மசெக அவர் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை,” என்று டாக்டர் பால் கூறினார்.

குறிப்புச் சொற்கள்