சமூகப் பங்காளிகள், தனிநபர்களின் குரல் தேவை: புதிய மசெக மனநலக் குழு

3 mins read
மனநலச் சவால்களை எதிர்கொள்ள கட்சியினரையும் சமூகத்தினரையும் இணைக்கும் புதிய மசெக மனநலக் குழு
04f25a15-7cb4-4abb-84e3-e789892378de
புதிய மசெக மனநலக் குழுவின் இணைத் தலைவர்கள் தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சரான டாக்டர் ஜனில் புதுச்சேரி (நடுவில்), ஜாலான் புசார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால், மன உளைச்சலைக் குறைக்கும் பந்துகளை அக்டோபர் 10ஆம் தேதி பொதுமக்களுக்கு வழங்கினர். - படம்: மக்கள் செயல் கட்சி

உலக மனநல தினமான அக்டோபர் 10ஆம் தேதியன்று தம் முதல் சமூக நிகழ்ச்சியை என்டியுசி நிலையத்தில் நடத்தியது புதிய மக்கள் செயல் கட்சி (மசெக) மனநலக் குழு.

அந்நிகழ்ச்சியில் மனநலக் குழுவின் சமூக செயற்குழுக்களும் துவக்கம் கண்டன. இத்திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களாக 13 மனநலம் சார்ந்த சமூக அமைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழுவோடு அக்டோபர் 5ஆம் தேதியன்று தொடங்கிய புதிய மசெக மனநலக் குழுவில் பல மசெக கிளைத் தலைவர்களும் கட்சித் தொண்டர்களும் உள்ளடங்குகின்றனர்.

மசெக மனநலக் குழுவின் செயற்குழு உறுப்பினர்களும் கிளைத் தலைவர்களும்.
மசெக மனநலக் குழுவின் செயற்குழு உறுப்பினர்களும் கிளைத் தலைவர்களும். - படம்: மக்கள் செயல் கட்சி

எனினும், கட்சி உறுப்பினர்களைத் தவிர சமூகத்தினர் குரலும் மனநலக் குழுவிற்குத் தேவை என்பதால் இப்புதிய சமூக செயற்குழுக்கள் அறிமுகமாகியுள்ளன.

“மனநலச் சவால்கள் குறித்த உண்மை வாழ்க்கை அனுபவங்களை எதிர்நோக்குவோரையும், சமூகத்தினரோடு நெருங்கிய தொடர்புகொண்டோரையும் இம்முயற்சியில் ஈடுபடுத்துவது முக்கியம்,” என்றார் மனநலக் குழுவின் இணைத் தலைவரும் தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி.

இச்செயற்குழுக்களில் ‘மெண்டல் ஏக்ட்’ (Mental ACT), ‘காம் கலெக்டிவ் ஆசியா’ (Calm Collective Asia), ‘சமாரிடன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’ (Samaritans of Singapore), சிங்கப்பூர் மனநலச் சங்கம் (Singapore Association for Mental Health), மனநலத் திரைப்பட விழா சிங்கப்பூர் (Mental Health Film Festival Singapore) போன்ற அமைப்புகள் உள்ளடங்குகின்றன.

இவை மக்கள் செயல்கட்சியின் 2022ஆம் ஆண்டு #BetterTogether இயக்கத்தை ஆதரித்தன; மக்கள் செயல் கட்சியுடன் பல்லாண்டுகளாகப் பணியாற்றியும் வந்துள்ளன.

இனி இக்குழுக்கள் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து, சிங்கப்பூரின் ஒவ்வொரு வட்டாரத்திலும் மக்களுக்காக கூடுதலான மனநல நடவடிக்கைகளை வழிநடத்தும். புதிய உறுப்பினர்களைக் குழுவில் சேர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபடும்.

“மனநலப் பிரச்சினைகளால் அல்லல்படுவோர் பலரும் வெளியே சென்று உதவி நாடாமல் வீட்டிலேயே அடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்குத்தான் அதிக உதவி தேவை. இச்செயற்குழுக்கள் மூலம் அவர்களைச் சென்றடைய விரும்புகிறேன்,” என்றார் 13 உறுப்பினர்களில் ஒன்றான ‘மெண்டல் ஏக்ட்’ இணை நிறுவனர் தேவானந்தன்.

மெண்டல் ஏக்ட் இணை நிறுவனர் தேவானந்தன்.
மெண்டல் ஏக்ட் இணை நிறுவனர் தேவானந்தன். - படம்: ரவி சிங்காரம்

கற்றல் அனுபவங்கள், மனநலத் தூதர்கள்

“கலந்துரையாடல்கள் ஏற்கெனவே நிகழ்கின்றன எனப் பலரும் கூறுவர். ஆனால், இன்னும் கூடுதலானவை தேவை. அப்போதுதான் உண்மையாக வாழ்வில் எதிர்கொண்ட மனநலச் சவால்களைப் பற்றி எங்களால் ஆழமாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப கொள்கைப் பரிந்துரைகளை முன்வைக்கமுடியும்,” என்றார் மசெக மனநலக் குழுவின் இணைத் தலைவரும் ஜாலான் புசார் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வான் ரிசால்.

இரு மாதங்களுக்கு ஒருமுறை சமூகப் பங்காளிகளின் இருப்பிடங்களுக்குச் சென்று அவற்றின் செயல்பாடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் திட்டத்தையும் தொடங்கவிருப்பதாகக் கூறினார் டாக்டர் ரிசால்.

“அடுத்த ஆண்டு இதைத் தொடங்குவோம் என எதிர்பார்க்கலாம். எதிர்காலத்தில் பொதுமக்களையும் இக்கற்றல் அனுபவங்களுக்கு அழைக்க விரும்புகிறோம்,” என்றார் அவர்.

“ஏற்கெனவே பல வட்டாரங்களில் தோழமை ஆதரவுக் குழுக்கள் (Peer Support Networks) உள்ளன. நம் புதிய சமூக செயற்குழுக்களின் உதவியோடு மசெக கிளைகளில் கூடுதலானோருக்கு மனநலத் தூதர்களாகச் செயல்பட முறையான பயிற்சி வழங்குவோம்.

தனிநபர்களும் குழுவில் இணையலாம்

சமூக அமைப்புகளில் இல்லாதவர்களும் தனிநபர்களாக இக்குழுவில் இணையலாம்.

“தனிநபர்களாகச் சேர்ந்தால் அவர்களது அடையாளத்தைப் பிறரிடம் தெரியப்படுத்தமாட்டோம். அவர்கள் தங்களின் சொந்த மனநல அனுபவங்களைக்கூட தைரியமாகப் பகிரலாம். தொண்டூழியராகவும் சேரலாம்,” என்றார் டாக்டர் ஜனில்.

இக்குழுவில் இணைய mental.health@pap.org.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது https://tinyurl.com/PAPMentalHealthGroup இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.

‘அனைத்து மொழிகளிலும் மனநலக் கலந்துரையாடல்கள் தேவை’

“மனநலக் கலந்துரையாடல்கள் தற்போது ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் நடைபெறுகின்றன. மற்ற மொழிகளுக்கும் இவற்றை எடுத்துச் செல்லவுள்ளோம். இது குறித்து சமூகத்தினரும் சிந்திக்கவேண்டும்.

“பல அடித்தள அமைப்புத் தொண்டூழியர்களுக்கு கிரெஸ்ட் (CREST), ‘கமிட்’ (COMIT) போன்ற சமூக, இளையர் உதவிக்குழுக்கள் இருப்பது தெரிவதில்லை. இவற்றை நாம் தெரியப்படுத்தவேண்டும்,” என்றார் டாக்டர் ஜனில்.

திட்டத்தைக் கட்சி உறுப்பினர்களும் வரவேற்கின்றனர்

“நான் செங்ஹுவாவில் இருந்தபோது திரு எட்வர்ட் சியாவுடன் பல மனநலத் திட்டங்களில் ஈடுபட்டேன். அண்மையில் யூனோஸ் கிளைக்கு மாறியுள்ளேன். இங்கும் பல மனநல திட்டங்களைக் கொண்டுவர விரும்புகிறேன்,” என்றார் புதிய மனநலக் குழுவில் சேர்ந்துள்ள மசெக யூனோஸ் கிளைத் தலைவர் ஜெகதீஸ்வரன் ராஜு, 37.

குறிப்புச் சொற்கள்