வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி குடியிருப்பாளர்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற முடியும் என்று மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் வெய் நெங் நம்பிக்கையோடு இருக்கிறார்.
“ஆனால் நான் மீண்டும் போட்டியிடுவதை பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று பிப்ரவரி 15ஆம் தேதி புதிய சைக்கிள் பாலம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர் தெரிவித்தார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் ஒரு பகுதியான ஜூரோங் வெஸ்ட்டில் அந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
திரு ஆங், 58, 2020ஆம் ஆண்டிலிருந்து வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் உள்ள நன்யாங் தொகுதியைப் பிரதிநிதிக்கிறார்.
2011, 2020க்கு இடைப்பட்ட முந்தைய இரண்டு தவணைகளில் ஜூரோங் குழுத் தொகுதியின் ஜூரோங் சென்ட்ரலை அவர் பிரதிநிதித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் போட்டி கடுமையாக இருந்தது. மக்கள் செயல் கட்சிக் குழு, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டு வெறும் 51.68 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
இந்த குழுத் தொகுதி, ஊழல் விசாரணை தொடர்பில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பதவி விலகியதால் ஒரு உறுப்பினரை இழந்துள்ளது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஃபூ மீ ஹார், ரேச்சல் ஓங், திரு ஆங் உள்ளிட்டோர் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் உறுப்பினர்களாக உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் சில மாதங்களாக வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் செம்ப்கார்ப் வர்த்தக விவகாரப் பிரிவின் தலைவரான வேலரி லீ, தொழில் முனைவர் சுவா வெய்-ஷான் ஆகியோர் புதிய முகங்களாக வலம் வந்துள்ளனர்.
தேர்தல் களத்தில் இறக்கப்படும் புதிய முகங்கள் பற்றி திரு ஆங்கிடம் கேட்டபோது, பிப்ரவரி 14ஆம் தேதி நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய ராஜ் ஜோஷுவா தாமஸ், சையது ஹருன் அல்ஹப்ஷி ஆகியோரை சுட்டிக்காட்டினார்.
பதவி விலகிய இருவரும் வரப்போகின்ற பொதுத் தேர்தலில் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் சையது ஹருன், தனது பதவி விலகல் கடிதத்தில் அரசியல் சேவையின் வாய்ப்புகளை ஆராய விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
திரு தாமஸ், தனது கடிதத்தில் சிங்கப்பூருக்கு சேவையாற்ற அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இருவரும் வெஸ்ட் கோஸ்ட்டில் நிறுத்தப்படுவார்களா என்பது தமக்குத் தெரியாது என்றார் திரு ஆங்.
வெஸ்ட் கோஸ்ட்டுக்கு இந்தியர் அல்லது இதர இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையினரைப் பிரதிநிதிக்கும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே தேவை என்றும் அவர் தெரிவித்தார்.