சமூக, ராணுவ அனுபவங்களை ஒருசேர கொண்டுவரும் மசெக புதுமுகம்

சமூக, ராணுவ அனுபவங்களை ஒருசேர கொண்டுவரும் மசெக புதுமுகம்

1 mins read
f1385842-053a-4639-a71b-a931ca168aaa
சிங்கப்பூர் ஆயுதப்படையின் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் கோ பெய் மிங், 43. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (மசெக) தரப்பில் களமிறக்கப்படும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் கோ பெய் மிங், 43, தற்காப்பையும் பாதுகாப்பையும் சிங்கப்பூர் ஒருபோதும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதைத் தமது அனுபவம் கற்றுத் தந்ததாகக் கூறியுள்ளார்.

ராணுவ அதிகாரியாகவும் அடித்தளத் தொண்டூழியராகவும் பொதுச் சேவை என்பது இவருக்குப் பரிச்சயமான ஒன்று. தாம் வளர்ந்த கம்போங் சாய் சீயில் 17 ஆண்டுகளாக இவர் தொண்டாற்றி வந்துள்ளார்.

2021லிருந்து கம்போங் சாய் சீ சமூக மன்றத்தின் நிர்வாகக் குழுத் தலைவராகவும் 2019லிருந்து அப்பகுதியின் குடிமக்கள் ஆலோசனைக் குழுத் துணைத் தலைவராகவும் இவர் இருக்கிறார்.

பொதுச் சேவை, சமூகச் சேவை அனுபவம் இரண்டையும் சேர்த்து மூத்தோர், பராமரிப்பாளர்கள், இளம் குடும்பங்கள் ஆகிய மூன்று பிரிவுகளைப் பிரதிநிதிக்க திரு கோ முற்படுகிறார்.

தேசிய அளவில் தற்காப்பு, பாதுகாப்பு, புவிசார் அரசியல் போன்ற விவகாரங்களில் பங்களிக்க இவர் விரும்புகிறார்.

அரசியலில் இந்த வழியில் பங்களிக்க மசெகவில் சேர்வது என்பது திரு கோவுக்கு தெளிவான முடிவாக இருந்தது.

“நாட்டை முன்னெடுத்துச் செல்ல என்னால் ஒரேயொரு கட்சியை மட்டுமே நம்ப முடியும். கடந்த 60 ஆண்டுகளாக அதன் சாதனைகள் ஒரு காரணம்.

“அதுமட்டுமன்று. கடப்பாட்டையும் ஆற்றலையும் தாண்டி நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை இரண்டும் தொடர்ந்து வலியுறுத்தப்படுவது மற்றொரு காரணம்,” என்றார் இவர்.

குறிப்புச் சொற்கள்