ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் பொதுத் துறையைச் சேர்ந்த மசெக புதுமுகம்

2 mins read
c838c80d-470f-471c-a141-7b810133c11b
அல்-அன்சார் பள்ளிவாசலில் அமைச்சர் எட்வின் டோங் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான், திரு தினேஷ் வாசு தாஸ் மற்றும் பள்ளிவாசலுக்கு வந்திருந்த மற்றவர்களுடன் படமெடுத்துக் கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் துறை பதவியிலிருந்து அண்மையில் விலகிய தினேஷ் வாசு தாஸ் திங்கட்கிழமை (மார்ச் 31ஆம் தேதி) ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சாய் சீயில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்றார்.

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (Agency for Integrated Care) தலைமைப் பொறுப்பிலிருந்து திரு தினேஷ், மார்ச் 27ஆம் தேதி விலகினார். பொதுத் துறையிலிருந்து பலர் அண்மையில் பதவி விலகியிருக்கும் நிலையில், மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணப்பட்ட அத்துறை சார்ந்த முதல் நபராக திரு தினேஷ் விளங்குகிறார்.

ஐம்பது வயது நிரம்பிய திரு தினேஷ், சாய் சீயில் உள்ள அல்-அன்சார் பள்ளிவாசலுக்குத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்குடன் அந்தப் பள்ளிவாசலுக்குச் சென்றார்.

அவர் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற ஊகம் நிலவும் நிலையில் அவர் பள்ளிவாசலுக்குச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவருடன் 40 வயது நிரம்பிய ‘மேக் அ விஷ்’ அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரியான திருவாட்டி ஹஸ்லினா அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

இதற்கு முன்னால் திருவாட்டி ஹஸ்லினா மெக்பர்சன் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொகுதி உலாவில் ஈடுபட்டதுடன் மரின் பரேட் குழுத்தொகுதியில் செய்தியாளர்கள், குடியிருப்பாளர்களுக்கு அதிகாரபூர்வமாக மார்ச் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான், தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் ஆகியோரும் பள்ளிவாசலுக்கு வருகை புரிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், முன்னதாகவே அங்கு சென்று சேர்ந்துள்ளார். மற்றோர் உறுப்பினரான திருமதி ‌ஷெரில் சான் பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

மார்ச் 31 காலை பள்ளிவாசலில், வழிபாட்டினரும் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவினரும் தங்களை அன்புடன் வரவேற்றதாக இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.

“சிங்கப்பூரில் இதுபோன்ற ஒரு நிகழ்வைக் கொண்டாட முடிவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதுதான் நாங்கள் அவர்களிடம் தெரிவித்த விஷயங்களில் ஒன்று. பல இனத்தவரும் பல சமயத்தினரும் ஒன்றுசேர்ந்து ஒரு பெருநாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவதுதான் சிங்கப்பூரின் தனித்துவமான சிறப்பு,” என்று திரு டோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்